2030-ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 1.1 கோடி குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழக்கும் அபாயம்!
உலக அளவில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமாக உள்ள தொற்று நோய்களில், மலேரியா, தட்டம்மை உள்ளிட்ட நோய்களையெல்லாம் விட நிமோனியாதான் அபாகரமானதாக உள்ளது.
இதனால் இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் நவம்பர் 12-ஆம் திகதி சர்வதேச நிமோனியா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த தினத்தையொட்டி பிரித்தானியாவை தலைமையிடமாகக் கொண்ட சேவ் தி சில்ட்ரன் என்ற தன்னார்வ அமைப்பு கடந்த திங்கள்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையில்,நிமோனியாவால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குழந்தைகள் உயிரிழக்கின்றனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு சுமார் 8.8 லட்சம் குழந்தைகள் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலான குழந்தைகள், 2 வயதுக்கு உள்பட்டவர்களாவர்.
இதேநிலை நீடித்தால், 2030-ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 1.1 கோடி குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழக்க வாய்ப்புள்ளது.
நைஜீரியா, இந்தியா, பாகிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு ஆகிய நாடுகளில்தான், இந்த எண்ணிக்கை அதிகம் இருக்கும்.
நைஜீரியாவில் 17.3 லட்சம், இந்தியாவில் 17.1 லட்சம், பாகிஸ்தானில் 7 லட்சம், காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் சுமார் 6 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கக் கூடும்.
மொத்த உயிரிழப்புகளில் சுமார் 50 லட்சம் உயிரிழப்புகளை தடுக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவுகள் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் 25 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்புகளை தடுக்க முடியும்.
மேலும், தடுப்பூசி போடுவதை பரவலாக்குவதன் மூலம் சுமார் 6 லட்சம் குழந்தைகளையும், நிமோனியாவை குணப்படுத்தும் மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கச் செய்வதன் மூலம் சுமார் 19 லட்சம் குழந்தைகளையும் காப்பாற்றலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2030-ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 1.1 கோடி குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழக்கும் அபாயம்!
Reviewed by Author
on
November 13, 2018
Rating:
Reviewed by Author
on
November 13, 2018
Rating:


No comments:
Post a Comment