பிடிபடும் முன் பாக். இடம் ஆவணங்கள் சிக்காதவாறு அழிக்க முயன்ற அபிநந்தன்: வானில் சுட்டுக்கொண்டே ஓடினார்
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து இந்திய எல்லையான ரஜவுரி பகுதியில் வந்து குண்டு வீசிவிட்டு பாகிஸ்தான் விமானங்கள் சென்றன. அப்போது பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதற்கிடையே பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் சென்ற இந்திய மிக் ரக விமானங்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்த அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியதும் அவரை ராணுவமும், பொதுமக்களும் சேர்ந்து தாக்கினர். ரத்தம் முகத்தில் வழிந்தோட, கைகள் கட்டப்பட்ட நிலையில் அபிநந்தன் அழைத்துச்செல்லப்படும் வீடியோ வெளியானது. அவரை பத்திரமாக மீட்கக் கோரி உலகம் முழுவதும் குரல்கள் எழுந்து வருகின்றன.
இதனிடையே விங் கமாண்டர் அபிநந்தனின் தைரியம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் இதழான 'டான்' வெளியிட்டுள்ள செய்தியில், மொகமது ரசாக் சவுத்ரி என்பவர் இரண்டு விமானங்கள் சுடப்படுவதைப் பார்த்தார். ஒன்று எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்திய எல்லைக்குள் விழுந்தது. மற்றொரு விமானம் வெடித்து, அதிலிருந்து புகை வர ஆரம்பித்தது. பாராசூட் மூலம் பத்திரமாகத் தரையிறங்கினார் அதிலிருந்த விமானி அபிநந்தன்.
பிஸ்டலுடன் இருந்த அவர், அங்கிருந்த இளைஞர்களிடம் இது இந்தியாவா, பாகிஸ்தானா என்று கேட்டுள்ளார். அவர்கள் வேண்டுமென்றே இது இந்தியா என்று கூறியுள்ளனர். உடனே இந்தியாவை ஆதரித்து கோஷமிட்டார் அபிநந்தன். இளைஞர்களிடம், தன்னுடைய முதுகுப்புறத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
இந்தியாவை ஆதரித்து அவர் பேசியது பாக். இளைஞர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. உடனே கீழே கிடந்த கற்களை எடுத்துத் தாக்கிய அவர்கள், அபிநந்தனைத் தாக்க ஆரம்பித்தனர். உடனே வானில் சுட்டவாறே ஓட ஆரம்பித்தார் அபிநந்தன். அவர்கள் அருகே வருவதைத் தடுக்கும் பொருட்டு தொடர்ந்து சுட்டுக்கொண்டே ஓடினார்.
ஆனால், தான் துரத்தப்படுவதை உணர்ந்த அவர், அருகில் இருந்த சிறிய குளத்துக்குள் குதித்தார். தன்னிடமிருந்த இந்திய ஆவணங்களையும் வரைபடங்களையும் நீருக்குள் மூழ்கடிக்க முயற்சித்தார்.
பட உதவி: டான்
இதனிடையே துரத்திய இளைஞர்களில் ஒருவர் அபிநந்தனின் காலில் சுட்டார்; மற்றவர்கள் அபிநந்தனை சூழ்ந்துகொண்டு தாக்கினர். இதனிடையே அங்கு வந்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அவர்களிடம் இருந்து அபிநந்தனை மீட்டனர்'' என்று டான் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவே இணையத்தில் வைரலானது. இதுவரை தனது பெயர், பதவி, ஊர், மதம் தவிர வேறெதையும் அபிநந்தன் பாகிஸ்தானிடம் பகிரவில்லை என்றே தெரிகிறது. அபிநந்தனின் வீரத்தையும் சமயோசிதத்தையும் மன உறுதியையும் நெட்டிசன்களும் இந்திய மக்களும் சிலாகித்து வருகின்றனர்.
பிடிபடும் முன் பாக். இடம் ஆவணங்கள் சிக்காதவாறு அழிக்க முயன்ற அபிநந்தன்: வானில் சுட்டுக்கொண்டே ஓடினார்
Reviewed by Author
on
March 01, 2019
Rating:

No comments:
Post a Comment