லண்டனில் வசிக்கும் மகள் திருமணத்துக்காக சிறையிலிருந்து வெளியில் வரும் நளினி..
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி, அவரது மகள் திருமண ஏற்பாட்டுக்காக ஓரிரு நாள்களில் பரோலில் விடுவிக்கப்பட உள்ளார்.
அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இத்தம்பதியின் மகளான ஹரித்ரா (26), கடந்த 1992-ஆம் ஆண்டு வேலூர் பெண்கள் சிறையில் பிறந்தார்.
தொடர்ந்து, 3 ஆண்டுகள் சிறையிலேயே நளினியுடன் வளர்ந்து வந்த ஹரித்ரா, அதன்பிறகு கோவையிலுள்ள உறவினர் வீட்டில் 3 ஆண்டுகளும், பின்னர் இலங்கையில் 5 ஆண்டுகளும் வளர்ந்தார்.
இதையடுத்து லண்டனில் உள்ள முருகனின் சகோதரர் வீட்டில் தங்கி படித்து வந்த ஹரித்ரா தற்போது மருத்துவப் பட்டம் பெற்று அங்கு பணியாற்றி வருகிறார்.
தனது மகள் ஹரித்ராவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய தன்னை 6 மாதம் பரோலில் விடுவிக்கக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதன்மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், நளினியை ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க கடந்த 5-ஆம் திகதி உத்தரவிட்டது.
இந்நிலையில், சிறையில் இருந்து நளினி ஞாயிற்றுக்கிழமை பரோலில் விடுவிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் செவ்வாய்க்கிழமை பரோலில் விடுவிக்கப்பட இருப்பதாக நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.
பரோலில் வரும் நளினி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவையின் துணைப் பொதுச் செயலர் சிங்கராயர் வீட்டில் ஒரு மாத காலம் தங்கியிருந்து ஹரித்ராவுக்கு மாப்பிள்ளை பார்த்தல் உள்ளிட்ட திருமண ஏற்பாடுகளை செய்ய உள்ளார். இதனிடையே, திருமண நிகழ்வுக்காக அவரது மகள் ஹரித்ரா அடுத்த இரு வாரங்களில் லண்டனில் இருந்து வேலூருக்கு வர இருப்பதாகவும் புகழேந்தி தெரிவித்தார்.
இந்நிலையில் நீதிமன்ற அனுமதியின் பேரில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் முருகன், நளினி சந்திப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
அப்போது, மகள் திருமணம் குறித்து இருவரும் உருக்கமாகப் பேசிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் வசிக்கும் மகள் திருமணத்துக்காக சிறையிலிருந்து வெளியில் வரும் நளினி..
Reviewed by Author
on
July 23, 2019
Rating:
Reviewed by Author
on
July 23, 2019
Rating:


No comments:
Post a Comment