விபத்தால் அழுகியது...துண்டிக்கப்பட்ட இடது கால்!- உலக பாரா பேட்மின்டனில் சாதித்த தங்க மங்கை மானசி
உலகத்தின் கண்களுக்கு சில சாதனைகள் புலப்படாமலேயே போய்விடுகிறது. அதன் கண்களில் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டனில் முதன்முதலாக தங்கம் வென்ற இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனை செய்த பி.வி.சிந்து தென்பட்ட வேளையில், அதற்கு ஒருநாள் முன்னதாக மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மானசி ஜோஷி தங்கம் வென்றது ஏனோ தென்படாமலே போய்விட்டது. நடிகை டாப்ஸி உள்ளிட்ட பிரபலங்கள் `இந்தத் தங்கத்தையும் பாராட்டுவதற்கு நாம் மறந்துவிடக் கூடாது' என்று தங்கள் கருத்தைப் பதிய, சமூக வலைதளங்களில் தற்போது இதுதான் பெரும்பேச்சாகப் பரவிக்கொண்டிருக்கிறது.
முழுப் பெயர் மானசி நயனா ஜோஷி. மும்பையில் பிறந்தவர். அடிப்படையில் ஒரு பொறியியல் மாணவியான இவருக்கு சிறு வயது முதலே பேட்மின்டன் விளையாட்டு ஒரு ஹாபியாக இருந்து வந்திருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன் அப்பாவுடன் பேட்மின்டன் விளையாடுவது மானசிக்குப் பிடித்த விஷயம். படிப்பை முடித்து, வேலைக்குச் சென்றபோது நிறுவனங்களுக்கு இடையேயான பேட்மின்டன் போட்டிகளில் விளையாட ஆரம்பிக்கிறார். எல்லாம் மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில்தான் அந்தக் கோரமான விபத்தை சந்தித்திருக்கிறார் மானசி.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒரு சாலையைக் கடக்கும்போது, மானசியின் மீது பெரிய டிரக் ஒன்று மோதி, இடது காலின் மீது ஏறி இறங்கியது. கைகள் உடைந்தன. உடல் முழுக்க ரத்தக் காயங்கள். விபத்து நடந்தப் பகுதியிலிருந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு போவதற்கு 3 மணி நேரம் ஆகியிருக்கிறது. அதன் பிறகு ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்வதற்கு 7 மணி நேரமாகியிருக்கிறது. மிக மோசமான விபத்து என்பதால், 12 மணி நேரங்கள் மானசிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்திருக்கிறது. இத்தனை போராட்டங்களுக்கு மத்தியில் மானசியின் நசுங்கிய இடது கால் அழுக ஆரம்பித்திருக்கிறது. வேறுவழியில்லாத மருத்துவர்கள் அதை ஆபரேஷன் செய்து நீக்கியிருக்கிறார்கள்.
தினமும் மூன்று முறை பேட்மின்டன் பிராக்டிஸ் செய்வது, உடல் எடையைக் குறைத்து தசையை வலுவாக்குவது என்று கடுமையாக பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறார் மானசி.
'அந்த நேரத்தில் என்னால் இனி ஓட முடியாது என்பதைத் தவிர வேறு எதுவும் மனதில் இல்லை' என்று சொல்கிற மானசி, அதன்பிறகு 4 மாதங்கள் செயற்கைக் காலுடன் நடக்கப் பயிற்சி எடுக்கிறார். பிறகு, பழையபடி நிறுவனங்களுக்கு இடையே நடைபெறுகிற பேட்மின்டன் போட்டியில் விளையாட ஆரம்பிக்கிறார். முதல் முயற்சியிலேயே தங்கம் வெல்கிறார். தன்னம்பிக்கை தொற்றிக்கொள்ள, தினமும் மூன்று முறை பேட்மின்டன் பிராக்டிஸ் செய்வது, உடல் எடையைக் குறைத்து தசையை வலுவாக்குவது என்று கடுமையாக பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறார் மானசி. உலக அளவில் நடைபெற்ற பல போட்டிகளில் களமிறங்கியவருக்கு வெற்றிகளும் தோல்விகளும் சகஜமாக, 2019-க்கான பாரா பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தன் கனவை தன் கடும் உழைப்பால் நிறைவேற்றியிருக்கிறார்.
வாழ்த்துகள் மானசி!
விபத்தால் அழுகியது...துண்டிக்கப்பட்ட இடது கால்!- உலக பாரா பேட்மின்டனில் சாதித்த தங்க மங்கை மானசி
Reviewed by Author
on
August 29, 2019
Rating:

No comments:
Post a Comment