ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது முடிவானது..? -
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவிய மும்முனைப் போட்டி எதுவும் சாத்தியமாகாத நிலையில் தற்போது அமைச்சர் சஜித் பிரேமதாஸவையே கட்சியின் வேட்பாளராக அறிவிக்க வேண்டிய சூழலுக்கு கட்சியின் தலைமை நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை அறிவித்தால் தனது தலைமை பதவிக்கு பாதிப்பு ஏற்படும் என மிகவும் ராஜதந்திர முறையில் செயற்பட்டு ரணில் விக்ரமசிங்க அதனைத் தவிர்த்து வந்தார்.
மேலும், சிறுபான்மை கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன தன்னை பிரதமராக தொடர்ச்சியாக பதவியில் இருக்க வேண்டும் என விரும்புவதால் சபாநாயகர் கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க அறிவிப்பார் என கூறப்பட்டது.
மேலும், அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனாரத்ன உள்ளிட்டோரிடமும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை சமரச பேச்சுக்களை நடத்தி சுமூகமான ஒரு சூழலுக்கு கொண்டு வந்தது.
இதன் பின்னர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தானே ஜனாதிபதி வேட்பாளர் என தீடீர் என ஒரு அறிவிப்பு விடுத்ததால் கட்சிக்குள் குழப்பங்கள் ஆரம்பித்தன.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் உயர் மட்ட உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடுகள் வலுப்பெற ஆரம்பித்தன.
உலக அளவில் கட்சிக்கான தொடர்புகளை பேணி வந்த கட்சியில் இருக்கும் அதி முக்கியஸ்தர்களான மலிக் சமரவிக்ரம போன்றோர் மூன்று அணிகளாக பிரிந்தனர்.
தான் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு ஒரு மனப்பூர்வமான ஆசை ஒன்றிருந்தது. தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தனது மருமகனான நவீன் திஸாநாயக்கவிற்கு ஒரு அரசியல் எதிர்காலத்தை தன்னால் அமைத்துக் கொடுக்க முடியும் என அவர் கருதினார்.
எனினும் அவ்வாறான சிந்தனைகள் எல்லாம் தற்போது தவிடுபொடியானதுடன் அமைச்சர் சஜித் பிரேமதாஸதான் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற சூழலை தோற்றுவித்துள்ளது.
அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் மதி நுட்பமான செயற்பாடும், மக்கள் மத்தியில் நான் தான் எதிர்காலத் தலைவர் என தனது பெயரை நிலைநாட்டியமையும் இதற்கு ஒரு காரணம்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியில் நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கே உள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்பது உறுதிப்படுத்தப்படாத நிலைப்பாடாக இருக்கின்றது.
ஜனாதிபதி வேட்பாளராக சஜித் அறிவிக்கப்பட்டால், தாம் கூறுவதை அவர் கேட்கமாட்டார் என்ற நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இருக்கின்றன.
சஜித் பிரேமதாஸ தன்னுடைய விருப்பத்தின் பேரிலேயே நடப்பார் தனது சொந்த சிந்தனைகளையே செயற்படுத்துவார் என்பதே இதற்குக் காரணம்.
ஒட்டுமொத்தமாக அமைச்சர் சஜித் பிரேமதாஸவே ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்ற நிலைப்பாட்டில் கட்சி இருப்பதாக ஐ.தே.கவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது முடிவானது..? -
Reviewed by Author
on
August 07, 2019
Rating:

No comments:
Post a Comment