ஊரடங்கு தளர்த்தல் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய பணிப்புரை -
உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்களை கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தி வருவதால் இலங்கையில் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே.
கடந்த சில வாரங்களாக அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இலங்கையில் சில நிபந்தனைகளோடு நேற்றைய தினம் தளர்த்தப்பட்டிருந்தது.
ஆனாலும் மக்கள் நிபந்தனைகளை கடைப்பிடிக்காது, அதாவது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காது பொது இடங்களில் கூட்டமாக நடமாடியதை காணக்கூடியதாக இருந்தது.
மதுபானக் கடைகளில் மக்கள் வெள்ளம் அலைமோதியது. அதனைத் தொடர்ந்து நேற்றைய தினமே மதுபானம் அனைத்தும் விற்பனையாகி விட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
மேலும் பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் மக்கள் நெரிசலாகவே பயணித்துள்ளமையும் கண்கூடு.
பேருந்து நடத்துனர்களும் அளவுக்கதிகமான மக்களை பேரூந்தில் ஏற்றியிருந்தனர்.
ஆனாலும் முச்சக்கரவண்டியிலேயே ஒருவருக்கு அதிகமான பயணிகளை ஏற்றுவதற்கு அரசு அனுமதி மறுத்திருந்த நிலையில் பேரூந்துகளில் காணப்பட்ட மக்கள் நெரிசலால் பலர் விசனம் தெரிவித்திருந்தனர்.
பல மாவட்டங்களில் மரக்கறிக் கடைகளில் மக்கள் கூடியிருந்தனர்.
மீன் கடைகளில், பலசரக்கு கடைகளில், மருந்தகங்களில் என மக்கள் கூட்டமாகக் குவிந்தனர்.
இந்நிலை கண்டே இன்று ஜனாதிபதி அவசர அவசரமாக மதுபானக் கடைகளுக்கு மறு அறிவிப்பு வரும்வரை திறப்பதற்கு அனுமதியை நிறுத்தியிருந்தார்.
மேலும் மீன் வியாபரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கொழும்பு பேலியகொட மீன் சந்தையும் மூடப்பட்டது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டிருப்பினும் மக்கள் நடமாட்டத்தை சிறிதேனும் குறைத்து நெரிசலாக திரிந்திருக்காமல் இருந்திருக்கலாம், மக்களிடையே இன்னும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு தேவைப்படுகின்றது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் இன்று ஜனாதிபதி காரியாலயத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி மேலும் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்துவது பற்றி தெரிவித்திருக்கின்றார்.
அதற்கேற்ப ஏற்கனவே அறிவித்ததன்படி 24ம் திகதி இரவு 8 மணி தொடக்கம் 27ம் திகதி அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
மேலும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில் குறைந்தளவான ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரசு மற்றும் தனியார் நிறுவன சேவை வழங்கும் நிறுவனங்கள் திட்டமிடப்படல் வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அத்தியாவசிய சேவை வழங்கும் முக்கியமான அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகள் ஆகியோருடன் இன்று ஜனாதிபதி காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அதிகாரிகளுக்கு தெரிவித்த முக்கிய பணிப்புரைகளாக,
நீர்க்குழாய்களை பதித்தல், வீதிகளை நிர்மாணித்தல் போன்ற கட்டுப்பாட்டுடன் செய்யக்கூடிய அபிவிருத்தி பணிகளை உடனடியாக ஆரம்பிக்கவேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஊழியர்களை கடமைக்காக அழைக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றியும் அறிவுறுத்திய ஜனாதிபதி வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை பின்பற்றி ஊழியர்களை அழைப்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேல் மாகாணம் உட்பட ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுலில் உள்ள பிரதேசங்களில் சேவைகளை பேணுவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.
போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளின் மூலம் விவசாய அறுவடைகளை கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் விவசாயிகளுக்கு பாரிய நிவாரணம் கிடைக்கும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்கள் வழங்கும் மருந்துகளை தபால் அலுவலகத்தின் ஊடாக விநியோகிப்பதன் மூலம் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த காலத்தில் நோயாளிகளுக்கு பெரும் சேவையொன்று வழங்கப்பட்டது.
தபால் அலுவலகத்தின் ஊடாக பட்டியல்களை சேகரித்தல், வங்கி வைப்புகளை பொறுப்பேற்றல் உள்ளிட்ட வழங்க முடியுமான சேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு அரசாங்கம் முறையானதொரு நிகழ்ச்சித்திட்டத்தை பின்பற்றிய போதும் மக்கள் அறிவுறுத்தல்களை உரிய முறையில் பின்பற்றாமை நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கு தடையாக அமைந்துள்ளது.
மக்கள் வாழ்க்கையை இயல்புநிலைக்கு கொண்டு வரும் நோக்குடன் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி சேவைகளை முன்னெடுக்கும் போதும் வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர உட்பட அமைச்சுக்களின் செயலாளர்களும் நிறுவனத் தலைவர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு தளர்த்தல் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய பணிப்புரை -
Reviewed by Author
on
April 22, 2020
Rating:

No comments:
Post a Comment