கொரோனா தடுப்பூசி – மனிதர்களிடத்திலான முதற்கட்ட சோதனையின் முடிவு, நம்பிக்கையளிக்கிறது.
எட்டு தன்னார்வலர்கள் அடங்கிய குழுவிற்கு அமெரிக்க நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரசிற்கான தடுப்பூசிச் சோதனையானது நல்லதொரு சாதகமான முடிவைத் தந்து கொரோனாவிற்கான தடுப்பூசி தொடர்பாக நம்பிக்கையொளியைத் தருகிறது.
பிரித்தானியாவின் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனாவிற்கான தடுப்பூசி உருவாக்க முயற்சியானது, நோய்த்தொற்றாளர்களுக்கு சோதித்துப்பார்த்து வெற்றியளித்திருப்பதாக செய்திகள் வெளியாகிய மறுநாள் அமெரிக்க நிறுவனத்தின் சோதனை முடிவுகள் தொடர்பாக இவ்வாறு செய்திகள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நிறுவனத்தின் இந்தச் சோதனை முயற்சியின் மூலம் அவர்கள் தயாரித்த அந்தக் குறித்த தடுப்பூசியானது, மனிதர்களுக்குப் பாதுகாப்பானது என்பதை மட்டுமே அவர்கள் மனிதர்களுக்குச் சோதித்துப் பார்த்ததன் மூலம் உறுதிப்படுத்தக்கூடிய செய்தியென்பதும், இந்தத் தடுப்பூசியானது கொரோனாவை வெற்றிகொள்ளுமா என்பதை இன்னமும் ஆய்வு முடிவுகள் உறுதிசெய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கன.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சோதனை முயற்சியானது, மனிதனுடைய நிறமூர்த்தங்களை ஓரளவுக்கு ஒத்திருக்கும் குரங்கிற்கு வழங்கப்பட்டு அந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது உறுதிப்படுத்தப்பட்டாலும், அந்தத் தடுப்பூசியால் வைரசினால் ஏற்படும் காய்ச்சல் குணமானாலும் அது மற்றவர்களுக்குத் தொற்றுவதிலிருந்து இந்தத் தடுப்பூசியால் தடுக்கமுடியாமல் போவதற்கான வாய்ப்புகளே இருக்க்கிறது. இவ்வாறாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவால் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் முதற்கட்டத்திலேயே இருக்கின்றன.
உலகெங்கிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் வெவ்வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்திக் கொரோனாவிற்கான தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான 76 நிறுவனங்களின் பட்டியல் உலக சுகாதார நிறுவனத்திடம் உண்டு. இந்த அமெரிக்க நிறுவனம் போலவே, ஆனால் வேறுபட்ட அணுகுமுறையுடன் ஆர்.என்.ஏ தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் பிரித்தானியாவின் இம்பீரியல் கல்லூரியும் உள்ளது. இம்பீரியல் கல்லூரியின் தொற்றுநோய்கள் மற்றும் நிர்ப்பீடணத் தொகுதியின் நோயெதிர்ப்பாற்றல் தொடர்பாக ஆய்வுகளைச் செய்யும் பேராசிரியர் றொபின் சர்டொக் அவர்கள் இந்த அமெரிக்க நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி உருவாக்க முயற்சி தொடர்பாகக் கருத்துரைக்கும் போது, அந்த மொடர்னா என்ற அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வு முயற்சிகளும் முதற்கட்ட சோதனை முடிவுகளும் ஊக்கமளிப்பனவாக உள்ளன எனக் கூறியுள்ளார்.
இந்த மொடர்னா எனப்படும் அமெரிக்க நிறுவனமானது இளவயதுத் தன்னார்வலர்களுக்கே இந்தச் சோதனை முயற்சியை மேற்கொண்டுள்ளது என்பதும் ஏனைய வயதினருக்கு இன்னமும் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பூசி – மனிதர்களிடத்திலான முதற்கட்ட சோதனையின் முடிவு, நம்பிக்கையளிக்கிறது.
Reviewed by NEWMANNAR
on
May 19, 2020
Rating:

No comments:
Post a Comment