கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை இலங்கைக்கும்......
ரஸ்யா உருவாக்கியுள்ள கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை இலங்கைக்கும் அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் யூரி பி. மெட்டேரி தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, வெளிவிவகார அமைச்சராக தினேஷ் குணவர்த்தன பொறுற்பேற்றமைக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய தூதுவர், இலங்கையின் பயன்பாட்டிற்காக தடுப்பூசியை அறிமுகப்படுத்த விருப்பம் தெரிவித்ததோடு, தடுப்பூசி பெற ஆர்வமாக இருந்தால் ரஷ்யாவில் உள்ள குறித்த துறை சார்ந்த அதிகாரிகளுடன் தொடர்புகொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், நாட்டின் சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் இலங்கை பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் என பல நாடுகளும் களமிறங்கியுள்ளன.
அந்த வகையில் ஏறத்தாழ 165 தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிராக உலகின் முதல் தடுப்பூசியை தாங்கள் உருவாக்கியுள்ளதாக
ரஷ்யா அறிவித்தது.
அந்த நாட்டின் இராணுவ அமைச்சகமும், கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து
உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக்-5’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி, தேவையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுவிட்டதாகவும் ஆற்றல் மிக்கது, பாதுகாப்பானது, நோய்
எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்பதெல்லாம் சோதனைகளில் நிரூபணமாகி இருக்கிறது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment