பறிபோகும் மட்டக்களப்பு எல்லை பிரதேசம்? பாதுகாப்பது யார்?
குறித்த சம்பவம் தொடர்பாக இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மற்றும் பண்ணையாளர்கள், இணைந்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய முகாமையாளர், ஏறாவூர் பற்று ஈரளக்குளம் கிராமசேவையாளர், கரடியனாறு பொலீசார் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிய தோடு காணி அபகரிப்பில் ஈடுபடும் பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரையும் சந்தித்திருந்தோம்.
மேற்படி சந்திப்பில் பல விடயங்கள் பேசப்பட்டன.
மட்டக்களப்பு எல்லை பகுதியில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் எந்த வித சட்ட விரோத காணி அபகரிப்பும் இடம்பெறவில்லை என்று கூறப்படும் நிலையில் இன்றைய தினம் நேரடியாக சென்று நிலமைகளை ஆராய்ந்த போது அங்கு ஒரு இன முரண்பாடுகளை உருவாக்கும் சம்பவங்கள் நடைபெறுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
அம்பாறை மாவட்டத்தின் தெய்அத்தகண்டிய பிரதேசத்தில் இருந்து வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் 106 குடும்பங்களுக்கு 5 ஏக்கர் காணி வீதம் விவசாய செய்கைக்கு தர வேண்டும் நாங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறினார்கள்.
குறித்த பகுதிக்கு பொறுப்பான கிராமசேவையாளர், மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய முகாமையாளர் பொலீசார் இணைந்து நீங்கள் அம்பாறை மாவட்டத்தில் இருந்து வந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது, உங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் காணி தருகிறோம் என்று கூறிய போதும் அதற்கு அவர்கள் இணங்க மறுத்ததுடன் எங்களுக்கு இந்த மாவட்டத்தில் தான் காணி வேண்டும் என்று கூறியதோடு.
அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநரை தொடர்பு கொண்டு நேரடியாக பேசி அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் பேசினார்கள்.
உண்மையில் இந்த விடயம் அரசின் உயர் மட்டத்தில் பேசி தீர்க்கப்பட வேண்டிய விடயம். இதில் கிழக்கு மாகாண ஆளுநரின் பின்னணி உண்டு. இந்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மாத்திரம் கவனம் செலுத்தி பல்வேறு அழுத்தங்களை உயர் மட்ட அதிகாரிகளுக்கு கொடுத்து வருகிறார்.
ஆனால் இந்த விடயம் ஒரு அரசியல் கட்சியின் பிரச்சினை அல்ல இது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருமானத்தை ஈட்டித்தரும் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற வாழ்வாதாரத்துடன் தொடர்புடையவை எனேவே. இதை ஒரு அரசியல் கட்சியின் பிரச்சினையாக பார்க்க கூடாது தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் கட்சியாக பிரிந்து நில்லுங்கள் இது மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பிரச்சினை இதற்காக மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாக்குகளை பெற்ற அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். இந்த பிரச்சினை ஊடகங்கள் ஊடாக வெளியே வந்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இது குறித்து சாணக்கியனை தவிர வேறு எந்த அரசியல் வாதிகளும் கவனம் செலுத்தாதது ஏன்?
பறிபோகும் மட்டக்களப்பு எல்லை பிரதேசம்? பாதுகாப்பது யார்?
Reviewed by Author
on
October 06, 2020
Rating:

No comments:
Post a Comment