அண்மைய செய்திகள்

recent
-

மதுரை திருச்சுனை அகஸ்தீஸ்வரர் கோயில் ஆச்சர்யம் - 67 ஆண்டுகளாக பாதாள அறையில் இருந்த சாமி சிலைகள்!

கோயிலில் உற்சவர் சிலைகள் இல்லாமல் இருப்பதை பார்த்த அதிகாரிகள் அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது, கோயிலின் பாதாள அறையில் பல ஆண்டுகளுக்கு முன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருச்சுனை அகஸ்தீஸ்வரர் கோயில் பாதாள அறைக்குள் 67 ஆண்டுகளுகளாக வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகள் அதிகாரிகளால் வெளியே எடுக்கப்பட்ட செய்தி அறிந்து மக்கள் அக்கோயிலுக்கு திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ளது திருச்சுனை கிராமம். இங்கு 13-ம் நூற்றாண்டில் மாற்வர்மன் சுந்தரபாண்டிய மன்னனால் அகஸ்தீஸ்வரர் கோயில் கட்டப்பட்டது. சிவபெருமான் - பார்வதி தேவியின் திருமணத்தைக் காண கயிலாயத்தில் தேவர்கள் உள்ளிட்ட பலரும் கூடியதால், தென்பகுதி தாழ்ந்ததால், அதை சரியாக்க அகத்தியரை ஈசன் அனுப்பினார் என்று புராணங்கள் கூறுகின்றன. 

அப்படி அகத்தியர் தெற்கு பகுதிக்குச் செல்லும்போது இங்குள்ள மலையில் சிவலிங்கத்தை வழிபட்டு அங்குள்ள சுனையில் நீர் அருந்தியதால் இந்த ஊருக்கு திருச்சுனை என பெயர் வந்ததாகவும், அந்த இடத்தில் அகஸ்தீஸ்வர் கோயில் அமைக்கப்பட்டதாகவும் ஊர்காரர்கள் தெரிவிக்கிறார்கள். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் தொன்மையான கோயில்களில் குடமுழுக்கு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதால் அந்த அடிப்படையில் இக்கோயிலிலும் அதிகாரிகள் வேலைகளைத் தொடங்கியுள்ளனர். அப்போது கோயிலில் உற்சவர் சிலைகள் இல்லாமல் இருப்பதை பார்த்த அதிகாரிகள் அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது, கோயிலின் பாதாள அறையில் பல ஆண்டுகளுக்கு முன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

 இந்த நிலையில் அறநிலையத் துறை உதவி ஆணையர் விஜயன், மேலூர் டிஎஸ்பி பிரபாகர், துணை தாசில்தார் பூமாயி உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் நேற்று பாதாள அறை பூட்டை உடைத்து திறக்கப்பட்டது. பாதாள அறைக்குள் இருந்த மூஷிக வாகன விநாயகர், சண்டிகேசுவரர், அம்மன் சிலைகளும், சூலம், விளக்குகள், பூஜை பொருள்கள் அனைத்தும் வெளியே எடுக்கபட்டன. அங்கு வேறு என்னென்ன பொருள்கள் மீதம் உள்ளது என்பதுபற்றி தெரிவிக்கவில்லை. 

 தற்போது எடுக்கப்பட்ட சிலைகள், பூஜைப்பொருள்கள் அனைத்தும் தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்புதான் இவைகள் கோயிலில் வைக்கப்படுமா இல்லையா என்பது தெரியவரும் என்று சொல்லும் அதிகாரிகள், என்ன காரணத்துக்காக இத்தனை ஆண்டுகாலம் பாதாள அறையில் வைத்துப் பூட்டபட்டது என்பதை விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் பாதாள அறையில் இருந்து எடுக்கப்பட்ட சாமி சிலைகளை வணங்க சுற்றுவட்டார மக்கள் கோயிலுக்குத் திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

-விகடன்





மதுரை திருச்சுனை அகஸ்தீஸ்வரர் கோயில் ஆச்சர்யம் - 67 ஆண்டுகளாக பாதாள அறையில் இருந்த சாமி சிலைகள்! Reviewed by Author on November 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.