அண்மைய செய்திகள்

recent
-

சென்னை: `உன் மகளைக் கொன்னுட்டேன்!’ - பெண்ணின் தந்தையை அதிரவைத்த நபர்

சென்னை புழலில் திருமணம் செய்துகொள்ளாமல் கணவன், மனைவிபோல வாழ்ந்துவந்த இளம்பெண் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர், எடப்பாளையம், லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (68). இவர், புழல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``என் மனைவியின் பெயர் கோமளா. நான் மீஞ்சூர் பஜார் நேரு சிலை அருகில் பழ வியாபாரம் செய்துவருகிறேன். 

எனக்குக் குழந்தை இல்லை. அதனால் கொருக்குப்பேட்டையில் எனக்குத் தெரிந்த குடும்பத்திலிருந்து ஐந்து மாதக் குழந்தையாக இருந்த சபரி என்கிற சபரிதாவைத் தத்தெடுத்து வளர்த்துவந்தேன். அவள், மீஞ்சூரிலுள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது வினோத் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டாள். பின்னர் அவர்கள் இருவரும் மெரட்டூரில் வசித்துவந்தனர். சபரிதாவுக்கும் வினோத்துக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. 

இந்தச் சமயத்தில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சபரிதாவைப் பிரிந்த வினோத், இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். இதையடுத்து சபரிதா, பசுபதி என்பவருடன் வாழ்ந்துவந்தார். அதன் பிறகு அவரையும் பிரிந்து வேறு நபருடன் சபரிதா வாழ்ந்துவந்தார். அதனால் சபரிதாவின் நடவடிக்கைகள் பிடிக்காததால் நான் அவளை எங்கள் வீட்டில் சேர்க்கவில்லை.


கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் எனக்கு போன் செய்த சபரிதா, தமிழரசன் என்பவருடன் சேர்ந்து புழல் லட்சுமியம்மன் கோயில் முதல் தெருவில் வசிப்பதாகக் கூறினாள். அதன் பிறகு சபரிதாவுக்கும் தமிழரசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் வீட்டைக் காலி செய்யும்படி ஓனர் தங்கராஜ் கூறியிருக்கிறார். இந்தத் தகவலை சபரிதா என்னிடம் கூறியதும் புழலுக்குச் சென்று ஓனர் தங்கராஜிடம் பேசினேன். அப்போது தங்கராஜிடம், இனிமேல் தமிழரசனுக்கும் சபரிதாவுக்கும் இடையே பிரச்னை வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன். அவர்களுக்கு வீட்டை வாடகைக்குக் கொடுக்கும்படி தெரிவித்தேன். அதற்கு வீட்டின் ஓனர் தங்கராஜ், என்னுடைய பெயரில் 6.9.2021-ம் தேதி அக்ரிமென்ட் போட்டுக் கொடுத்தார். அதன் பிறகு அந்த வீட்டில் சபரிதாவும் தமிழரசனும் குடியிருந்துவந்தனர். இந்த நிலையில் 8.12.2021-ம் தேதி காலை 7 மணியளவில் பைக்கில் தமிழரசன் என்னுடைய வீட்டுக்கு வந்தார். அப்போது அவர், `உன் மகள் சபரியைக் கொன்னுட்டேன். போய் தூக்கிப் போடு' என்று சொல்லிவிட்டு பைக்கில் சென்றுவிட்டார். 

அதனால் அதிர்ச்சியடைந்த நான், மீஞ்சூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டு புழலுக்கு வந்தேன். அப்போது சபரிதா குடியிருந்த வீடு வெளிபக்கமாகப் பூட்டியிருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியோடு பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது படுக்கையறையில் சபரிதா இறந்துகிடந்தாள். அவளின் மூக்கில் ரத்தம் வடிந்திருந்தது. கழுத்தில் தழும்புகள் இருந்தன. அதனால் தமிழரசன், என் மகள் சபரிதாவைக் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரியவருகிறது. எனவே, என் மகள் சபரிதாவைக் கொலை செய்த தமிழரசன்மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரமேஷ் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். 

தலைமறைவாக உள்ள தமிழரசனை போலீஸார் தேடிவருகின்றனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், ''கொலைசெய்யப்பட்ட சபரிதாவுக்கு 28 வயதாகிறது. சபரிதாவும் தமிழரசனும் திருமணம் செய்துகொள்ளாமல் கணவன், மனைவிபோல ஒரே வீட்டில் குடியிருந்து வந்திருக்கின்றனர். தமிழரசன், லோடுமேனாக வேலை பார்த்துவருகிறார். சபரிதா, செல்போனில் நீண்ட நேரம் பேசுவதை தமிழரசன் கண்டித்திருக்கிறார். மேலும் சபரிதாவின் நடவடிக்கையிலும் தமிழரசனுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவரைக் கொலை செய்துவிட்டு தமிழரசன் தப்பிச் சென்றிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைசெய்யப்பட்ட சபரிதா, அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் வேலை பார்த்துவந்தார். இந்தச் சமயத்தில் தமிழரசன் பதுங்கியிருக்கும் இடம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதனால் அவரை விரைவில் கைதுசெய்துவிடுவோம்" என்றனர்.



சென்னை: `உன் மகளைக் கொன்னுட்டேன்!’ - பெண்ணின் தந்தையை அதிரவைத்த நபர் Reviewed by Author on December 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.