யானையின் தாக்குதலுக்கு உள்ளான இளம் பெண் உயிரிழப்பு!
உயிரிழந்தவர் கண்ணகிகிராமம் 01 இல் வசித்துவந்த 31 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான நாகராசா சுலசுனா என தெரியவருவதுடன் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது இன்று அதிகாலை கிராமத்தினுள் புகுந்த யானையொன்று வீடொன்றை முற்றாக சேதமாக்கிய பின்னர் வீதி அருகில் இருந்த இன்னுமொரு வீட்டினுள் நுழைந்து வீட்டை சேமாக்கியுள்ளது.
சத்தம் கேட்ட நிலையில் வெளியே வந்த குறித்த பெண் யானையை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில் யானையை விரட்டி தனது பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக முயற்சித்தபோது யானையின் தாக்குதலுக்கு உள்ளானார்.
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான பெண்ணின் மூத்த பிள்ளை அடிபட்டு வீழ்ந்த தாயை காப்பாற்ற முயற்சித்தபோதும் பயனளிக்காத நிலையில் தாயின் உத்தரவிற்கு அமைய வெளியே ஓடியுள்ளார். இந்நிலையில் இளைய பிள்ளையினை தும்பி கையால் யானை தூக்கியபோதும் அதிலிருந்து குறித்த பிள்ளை அதிஷ்டவசமாக தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும் அயலவர்களும் உயிரிழந்த பெண்ணின் தாயும் கூக்குரலிட்டு யானையை விரட்ட முயற்சித்தபோதும் மீண்டும் யானை பெண்ணை தாக்கிவிட்டு வெளியேறி சென்றுள்ளது.
இந்நிலையில் படுகாயமடைந்த பெண்ணை கிராமத்தவர்கள் இணைந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் நடைபெற்றபோது தம்மை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை என்பதுடன் அருகில் இருந்த இராணுவத்தினரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என உயிரிழந்த பெண்ணின் தாய் அழுது புலம்பினார்.
குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையிலான பிரதேச செயலக உத்தியோகத்தர் குறித்த இடங்களுக்கு சென்று நேரில் பார்வையிட்டதுடன் உயர் அதிகாரிகளுக்கும் அறிய கொடுத்துள்ளனர்.
அத்தோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நட்ட ஈட்டினை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் யானை தொல்லையிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அன்மைக்காலமாக கண்ணகிகிராமம் உள்ளிட்ட அயலில் உள்ள சிறு கிராமங்களிலும் யானையின் தொல்லை அதிகரித்து வருகின்றமையும் இதனால் அங்கு வாழும் மக்களும் விவாசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகளும் அச்சத்தில் உறைந்து போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யானையின் தாக்குதலுக்கு உள்ளான இளம் பெண் உயிரிழப்பு!
Reviewed by Author
on
November 10, 2022
Rating:
Reviewed by Author
on
November 10, 2022
Rating:


No comments:
Post a Comment