மன்னார் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்து பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் விசனம் .
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கீழ் செயல்படும் மன்னார் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மன்னாரில் வணிக மற்றும் வர்த்தக நிலையங்களில் பொருட்களை சட்ட வரம்புகளுக்கு மீறி கையகப் படுத்துவதாகவும் வர்த்தக நிறுவன உரிமையாளர்களிடம் லஞ்சம் பெறுவதாகவும் அதிகமான வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறிப்பாக வர்த்தக நிலையங்களுக்குள் நுழையும் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் அங்குள்ள பொருட்களை தங்கள் பாவனைக்காக எடுத்து கொள்வதாகவும் அதே நேரம் முறைப்பாடுகளை எழுதிய பின்னர் மாவட்ட செயலகத்தில் உள்ள அலுவலகத்திற்கு கடை உரிமையாளரை அழைத்து லஞ்சம் கோருவதாகவும் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரம் கடைகளில் வெளிநாட்டு உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படும் போது அப்பொருட்களை கையகப்படுத்தும் அதிகாரிகள் கைப்பற்றப்படும் பொருட்கள் தொடர்பில் கடை உரிமையாளருக்கு எவ்விதமான ஆவணங்களும் வழங்குவதில்லை என்பதுடன் அவற்றில் பலவற்றை தங்களுடைய பாவனைக்கு பயன்படுத்தி குறைந்த அளவிலான பொருட்களையே நீதிமன்றத்தில் சான்று பொருட்களாக வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான செக்லேட்டுகளை தங்கள் சொந்த பாவனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.
அத்துடன் இன்னும் பல வர்த்தக நிலையங்களில் இது போன்ற செயற்பாட்டை நுகர்வோர் அதிகார சபை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மன்னார் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்து பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் விசனம் .
Reviewed by Author
on
July 09, 2023
Rating:

No comments:
Post a Comment