வருடத்துக்கு 900 சிறுவர்கள் புற்று நோயாலும் 100 சிறுவர்கள் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்படுகின்றனர்
நாட்டில் தற்போது சிறுவர்கள் மத்தியில் அம்மை , புற்று நோய் மற்றும் நீரழிவு நோய் பரவும் வீதம் சற்று அதிகரித்துள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
எனவே பெற்றோர் தமது குழந்தைகளுக்கு உரிய வயதில் அம்மை நோய் எதிர்ப்பு தடுப்பூசியைப் பெற்றுக் கொடுப்பதோடு , ஏனைய நோய்களிலிருந்து பாதுகாப்பு பெற உணவு பழக்கங்களில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று விசேட சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
கடந்த சில வருடங்களாக சிறுவர்கள் மத்தியில் புற்று நோய் அதிகரித்து வருகிறது. வருடத்துக்கு சுமார் 900 சிறுவர்கள் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
அதே போன்று வருடத்துக்கு சுமார் 100 சிறுவர்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 10 – 15 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறானதொரு நிலைமை காணப்படவில்லை. ஆனால் இன்று சிறுவர்கள் அதிகளவில் புற்று நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு உள்ளாவதில் பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன.
எனினும் இவற்றில் தவிர்க்கக் கூடிய பல காரணிகள் காணப்படுகின்றன. உணவு பழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.
எண்ணெய், சீனி அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்த்தல் , குறுகிய நேரத்தில் சமைக்கக் கூடிய உணவுகளை தவிர்த்தல் மூலம் சிறுவர்களை இந்த நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும்.
இதேவேளை தற்போது சிறுவர்கள் மத்தியில் அம்மை நோய் பரவும் வீதமும் சற்று அதிகரித்துள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. கொழும்பு – சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் 12 சிறுவர்கள் அம்மை நோய் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வருக்கு அம்மை நோய் காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள் பிறந்தவுடன் குறிப்பிட்ட வயதுக்குள் அரச வைத்தியசாலைகளில் அம்மை நோய் எதிர்ப்பு தடுப்பூசி வழங்கப்படுகிறது. எனினும் இந்நோயின் அபாயதன்மை குறித்த தெளிவின்மையால் பெரும்பாலான பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு இந்த தடுப்பூசியை பெற்றுக் கொடுக்காமல் உள்ளனர். எனவே தற்போது இந்த நோய்க்கு உள்ளாகியுள்ள சிறுவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களாகவே காணப்படுகின்றனர்.
குழந்தை பிறந்து 9 மாதங்கள் நிறைவடைந்த பின்னரும் , 3 வயது பூர்த்தியான பின்னரும் என்.எம்.ஆர். எனப்படும் அம்மை தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். இந்த தடுப்பூசியைப் பெற்றால் இந்நோய் ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவாகும். இந்நோய் தீவிர நிலையை அடைந்தால் பிற்காலத்தில் அது மூளை பாதிப்புக்களைக் கூட ஏற்படுத்தக் கூடும். எனவே எக்காரணத்துக்காகவும் தமது பிள்ளைகளுக்கு இந்த தடுப்பூசியை வழங்காமல் இருக்க வேண்டாம் என பெற்றோரை அறிவுறுத்துகின்றோம் என்றார்.
 Reviewed by Author
        on 
        
July 12, 2023
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
July 12, 2023
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment