நீதிமன்றம் சென்ற பெண் மீது கத்தி குத்து
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று (25) பிற்பகல் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு வந்த பெண்ணொருவரின் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பி ஓடிய நபரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த பெண் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை பாரதுாரமாக இல்லை எனவும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தனது வீட்டில் ஐந்து பவுண் பெறுமதியான தங்கப் நகைகள் சிலவற்றை காணவில்லை என தனது சகோதரன் மீது சந்தேகம் இருப்பதாக குறித்த பெண் பாதுக்கை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராகி பின்னர் வீடு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார்.
இதன்போது முச்சக்கர வண்டியொன்றில் இருந்து வந்த சந்தேகநபர், கூரிய ஆயுதத்தால் அப்பெண்ணின் கழுத்தில் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பூகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவத்தில் தனது சகோதரனும் அவரது மனைவியும் சந்தேகத்திற்குரியவர்கள் என குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Reviewed by Author
on
October 25, 2023
Rating:


No comments:
Post a Comment