பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமானது வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம்
வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப உற்சவமான பாக்குத்தெண்டல் உற்சவம் இன்று 06.05.2024 அதிகாலை சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
பாரம்பரிய வரலாற்று தொன்மைமிக்க தெய்வமான வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வை ஆலயத்துடன் தொடர்புடைய வீடுகளுக்கு சென்று தெரிவிக்கும் சம்பிரதாய உற்சவமாக இந்த பாக்குத்தெண்டல் உற்சவம் அமைந்துள்ளது
அந்தவகையில் இன்று (06) அதிகாலை 1.30 மணியளவில் முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் மடைபரவி வழிபாடுகள் இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து ஆலயத்துடன் பாரம்பரியமாக தொடர்புடைய குடும்பங்களிடம் சென்று பாக்குத்தெண்டல் நடைபெற்றுள்ளது.
பாக்குத்தொண்டலுக்கு சென்றவர்கள் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தினை வந்தடைந்ததும் அங்கு அம்மன் சன்னிதானத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
பக்குத்தெண்டல் நடைபெற்று ஏழாவது நாளில் முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம் எடுத்து வந்து காட்டாவிநாயகர் ஆலயத்தில் அம்மன் சன்நிதானத்தில் உப்புநீரில் விளக்கேற்றி கண்ணகி அம்மனின் பொங்கல் ஆரம்பமாகின்றமை தொன்று தொட்ட வழமை.
அந்த வகையில் எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட் கிழமை கடல்நீர் தீர்த்தம் எடுத்தல் நிகழ்வும் அதனை தொடர்ந்து ஏழுநாட்கள் முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் அம்மன் சன்நிதானத்தில் உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத நிகழ்வு இடம்பெற்று எதிர்வரும் 19 ஆம் திகதி காட்டாவிநாயகர் ஆலய பொங்கல் உற்சவம் இடம்பெற்று 20 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment