அர்ச்சுனா எம்.பியின் விவகாரம் – ஆராய விசேட குழு
நாடாளுமன்றில் தான் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவதில் தமக்கு தொடர்ந்தும் சிக்கல்கள் இருப்பதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய அர்ச்சுனா எம்.பி,
”ஆளும் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களினது நாடளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றுவதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் உள்ளது. அதற்கான நடவடிக்கையை சஜித் பிரேமதாச எடுக்கவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்தது மேலே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வீடு செல்வதற்கு இல்லை. தனக்கு உரையாற்றச் சந்தர்ப்பம் வழங்கப்படாமையால் நாடாளுமன்றம் வந்தும் பயனற்ற நிலைமை உள்ளது.” என்றார்.
இதன்போது, குறுக்கிட்ட எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க, இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி இருப்பதாகவும், இந்த விடயத்தில் சபாநாயகரின் அறிவுறுத்தலுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவுறுத்தலை சபாநாயகர் வழங்கியபோதும், அதற்கான நடவடிக்கையை சஜித் பிரேமதாச எடுக்கவில்லை எனவும் அர்ச்சுனா எம்.பி குற்றம் சுமத்தினார்.
இதற்கு பதில் அளித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன, ”எதிர்க்கட்சி பிரதம கொறடாவுக்கு தொடர்பில் உரிய கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம். அர்ச்சுனா எம்.பியின் விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து தீர்வு வழங்க விசேட குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.
Reviewed by Author
on
January 07, 2025
Rating:


No comments:
Post a Comment