யாழில் எவ்வாறு நடந்துகொள்கிறீர்களோ அதுவே வன்னியில் பதிலாக இருக்கும் - இலங்கை தமிழ் அரசு கட்சித் தலைவர்கள் ரெலோவிடம் நேரில் தெரிவிப்பு
உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ரெலோ உட்பட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி எவ்வாறு நடந்து கொள்கின்றதோ வன்னி தேர்தல் மாவட்டத்தில் அதே பதில் முறைமையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் நடந்துகொள்ளும் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்கள், ரெலோ தலைவர்களிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் அதன் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமியும் நேற்று முன்தினம் யாழ். நல்லூரில் சி.வி.கே. சிவஞானத்தின் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
வன்னியில் வவுனியா மாநகர சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளில் தங்கள் தரப்பு நிர்வாகத்தை அமைப்பதற்கு ஆதரவு வழங்கும்படி ரெலோ தரப்பினர் இந்தச் சந்திப்பின்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியிடம் கோரிக்கை விடுத்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளின் விடயத்தில் ரெலோ கட்சியும் அது சார்ந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் எப்படி நடந்துகொள்கின்றனவோ, அதே முறைமையில் வன்னியில் பதில் தரப்படும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவரும் பதில் பொதுச்செயலாளரும் ஒரே நிலைப்பாடாக உறுதியாக ரெலோ பிரதிநிதிகளிடம் தெரிவித்தனர்.
அந்தந்த சபைகளில் அதிக இடங்களைப் பெற்ற கட்சி, ஆட்சி அமைப்பதற்கு உதவும் முன்னைய பகிரங்க அறிவிப்பை ரெலோவும், அது சார்ந்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் பின்பற்றுமானால் அதே முறைமையை இலங்கை தமிழ் அரசும் தவறாமல் பின்பற்றும்.
அந்த முறைமைக்கு மாறான போக்கை ரெலோ உட்பட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பின்பற்றுமானால், அதேபோல் மாறான முறையைத் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வன்னியில் பின்பற்றும் என்று அக்கட்சியின் இரு தலைவர்களும் உறுதிபடத் தெரிவித்தார்கள்.
இதேவேளை குறித்த சந்திப்பு தொடர்பில் சுமந்திரன் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி செயல்பட வேண்டும்.
அவர்கள் அதற்கு மாறாக செயற்படுவார்களானால் வவுனியா மாநகர சபை மற்றும் வன்னிப் பிரதேசத்தில் உள்ள அனைத்து சபைகளிலும் நாமும் வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் செயற்படுவோம் என எதிர்பார்க்கக் கூடாது.
Reviewed by Vijithan
on
June 10, 2025
Rating:


No comments:
Post a Comment