அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகரில் உடைக்கப்பட்ட தந்தை செல்வாவின் உருவச்சிலை புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு

 மன்னார் நகரில் அமைந்திருந்த தந்தை செல்வாவின் உருவச்சிலை கடந்த வாரம் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்ட நிலையில் குறித்த உருவச்சிலை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (1) காலை 10.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.


இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மத தலைவர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கட்சியின் உறுப்பினர்கள்,மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,நகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


இதன் போது அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் மத தலைவர்கள்,கட்சியின் முக்கியஸ்தர்கள், மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


மன்னார் நகர மத்தியில் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்டிருந்த   தந்தை செல்வாவின் சிலை கடந்த  புதன்கிழமை (25) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.                                          


தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை முக்கியஸ்தர்கள்  மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


தந்தை செல்வாவின் உருவச் சிலையில் காணப்பட்ட அவரது தலை முழுமையாக அகற்றப்பட்ட நிலையில் அவரது சிலைக்கு அருகில் இருந்து தலைப்பாகம் மீட்கப்பட்டுள்ளது. 


சிலை உடைப்பு சம்பவத்தை தொடர்ந்து மன்னார் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைவாக குறித்த சம்பவத்துடன்  தொடர்புடையதாக கருதப்படும் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.














மன்னார் நகரில் உடைக்கப்பட்ட தந்தை செல்வாவின் உருவச்சிலை புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு Reviewed by Vijithan on July 01, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.