மன்னார் காற்றாலை மின்சாரத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்
மன்னார் பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் போது, நாட்டின் எரிசக்தித் தேவைகள் மற்றும் பொருளாதாரத்திற்கு இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.
காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தால் இப்பகுதி மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதற்கான ஒரு கட்டமைப்பை நிறுவுவது என்றும், விலைமனு கோரல்கள் ஊடாக ஒப்பந்தங்கள் வழங்குவதன் மூலம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள 20 மெகாவாட் மற்றும் முன்மொழியப்பட்ட 50 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களின் கட்டுமானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
எரிசக்தி என்பது பிராந்திய வளம் மட்டுமல்ல, நாட்டிற்கான தேசிய வளமும் கூட என்றும், மின்சாரப் பிரச்சினை உள்நாட்டு மின்சாரக் கட்டணங்களுடன் மட்டுமல்லாமல், நாட்டின் உற்பத்திச் செலவுகள், வெளிநாட்டு முதலீடு மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்துடனும் தொடர்புடையது என்றும் ஜனாதிபதி இந்தக் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டினார்.
இந்தத் திட்டங்களால் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தில் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசாங்கம் எந்த நேரத்திலும் தயாராக உள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
நாட்டின் அனைத்து வளங்களும் இந்த நாட்டு மக்களுக்குச் சொந்தமானது என்றும், எரிசக்தி என்பது ஒரு பகுதிக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல, மாறாக முழு நாட்டு மக்களின் உரிமை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அபிவிருத்தித் திட்டங்களை மேலும் தாமதப்படுத்துவது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வாய்ப்பை இழக்கச் செய்யும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு நிவாரணம் வழங்க அரசாங்கத்தால் முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எனவே, அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்தும்போது அனைத்து தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்றும், அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் பகுதிகளில் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எந்த நேரத்திலும் தீர்வுகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
மன்னார் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் மதத் தலைவர்களும் மக்களும், இல்மனைட் திட்டமும் காற்றாலை திட்டமும் சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதோடு மக்களின் வாழ்க்கையையும் பாதித்து வருவதாக தெரிவித்தனர்.
சுற்றுச்சூழல் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை முறையாக செயல்படுத்தத் தவறியது குறித்தும் மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டுச் சென்றனர்.
மன்னார் பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மேற்படி காலப்பகுதியில் பிரச்சினைகளை ஆராய்ந்து உடனடி தீர்வுகளை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
மன்னார் காற்றாலை மின்சாரத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்
Reviewed by Vijithan
on
August 13, 2025
Rating:

No comments:
Post a Comment