அண்மைய செய்திகள்

recent
-

டெல்லி கார் வெடி விபத்து எதிரொலி - ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகள் மற்றும் சுற்றுலா தளங்களில் உச்சகட்ட பாதுகாப்பு:

 டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து விபத்து ஏற்பட்டதை அடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதியில் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய கோவில்களில்  ஆயுதம் ஏந்திய போலீசார் மற்றும் வெடிகுண்டுகளை கண்டறியும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


 அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் உலகப்பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் மற்றும் ஏர்வாடி தர்கா ஆகிய இரண்டும்  வெளி மாநிலங்களை சேர்ந்த அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பகுதி என்பதால் ராமேஸ்வரம், ஏர்வாடி தர்கா, ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


காவல்துறை உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் என  அனைத்து போலீசாரும்  இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


 மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 23 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.


ராமேஸ்வரம் மற்றும் ஏர்வாடி தர்கா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் அரசு விடுதிகளில் 12 குழுக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், தங்கும் விடுதிகளில் தங்கி உள்ள நபர்களை விலாசம் மற்றும் அவர்களின் ஆதார் எண் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு அறையிலும் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மேலும் ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 25 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் போலீசார் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, டெல்லி, ஜார்கண்ட் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வரும் பதிவெண் கொண்ட வாகனங்கள் முழுமையான சோதனைக்கு பின்னர் ராமேஸ்வரத்திற்குள்  அனுமதிக்கின்றனர்.


15 ரோந்து வாகனங்கள் கண்காணிப்பு பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன


ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு மாநிலங்களில் இருந்து ரயில்கள் வந்து செல்வதால்  “தேவசேனா”  என்ற வெடிகுண்டு கண்டறியும் நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார்  பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.


மேலும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில்  மற்றும் உத்தரகோசமங்கை கோயிலில்  ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


 கடற்கரைப் பகுதிகளில்  பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தனுஷ்கோடி உள்ளிட்ட முக்கிய கடல் பகுதிகளில் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை மற்றும் கடலோர காவல் குழும போலீசார் தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்டு வருவதுடன் உச்சப்புளி ஐஏஎஸ் பருந்து கடற்படை தளத்தில் உள்ள ஹெலிகாப்டர்கள்  மூலமாக வான் வழி கண்காணிக்கப்பட்டு வருகிறது.


 ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி, ஏர்வாடி ராமேஸ்வரம் ஆகிய மூன்று  கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது டன் ஏர்வாடி தர்கா சுற்றுவட்டார பகுதியில் இன்ஸ்பெக்டர் தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என இரவில் ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தெரிவித்தார்.









டெல்லி கார் வெடி விபத்து எதிரொலி - ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகள் மற்றும் சுற்றுலா தளங்களில் உச்சகட்ட பாதுகாப்பு: Reviewed by Vijithan on November 11, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.