அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் காற்றாலை க்கு எதிரான போராட்டம் 100வது நாளை எட்டிய நிலையில் இடம் பெற்ற தீப்பந்த எழுச்சி போராட்டம்

 மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை(10) நூறாவது (100) நாளை எட்டியுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை இரவு 7.30  மணியளவில் தீப்பந்த எழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


போராட்டக் குழுவின் ஏற்பாட்டில்,அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் குறித்த தீப்பந்த எழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


குறித்த போராட்டத்தில் ஆண்கள்,பெண்கள்,போராட்டக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியான முறையில் கையில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு காற்றாலைக்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.


மக்களையும், மக்களின்  வாழ்  விடங்களையும், நாட்டின் வளத்தையும், பாதுகாத்து வருங்கால சந்ததியினரிடம் கையளிக்கும் மாபெரும் வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் 100வது நாளை ஈட்டிய நிலையில், இன்னும் தொடரும் என தெரிவித்துள்ளனர்.


இப்போராட்டத்தின் 100வது நாளை நினைவுகூரும் இந்நாளில், மூன்று காத்திரமான கோரிக்கைகளை மக்கள் சார்பில்  முன் வைத்துள்ளனர்.


மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை  உடன் நிறுத்தி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்,மன்னார் தீவில் எந்த ஒரு இடத்திலும் கனிய மணல் அகழ்வுக்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது.


அமைக்கப்பட்ட (தம்ப்பவனி நறுவிலிக்குளம்) 2 காற்றாலை உயர் மின் உற்பத்தி திட்டங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களை உடன் நிவர்த்தி செய்தல் ஆகிய காத்திரமான 3 கோரிக்கைகளையும் அரசு தம் மக்களின் கோரிக்கை யாக ஏற்றுக்கொண்டு, மக்களின் விருப்பத்தை நிறை வேற்றுவதாக எழுத்து மூலம் அறிவிக்கும் பட்சத்தில், எங்களுடைய மக்களின் இந்த புனிதமான அறவழிப் போராட்டம் நிறைவுக்கு வரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


மேலும் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட தீப்பந்த எழுச்சி போராட்டம் நாளை முதல் கிராமங்கள் தோறும் இடம்பெறும் என போராட்டக்குழு  சார்பாக அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.











மன்னாரில் காற்றாலை க்கு எதிரான போராட்டம் 100வது நாளை எட்டிய நிலையில் இடம் பெற்ற தீப்பந்த எழுச்சி போராட்டம் Reviewed by Vijithan on November 11, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.