அண்மைய செய்திகள்

recent
-

நாட்டு மக்களுக்கு சீரான முறையில் எரி பொருளை பெற்றுக் கொடுக்க தற்போதைய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது போதும் எதிர் கட்சியினர் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கின்றனர்.

 மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கையில் ஏப்ரல் மாதம் வரை போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் சீரான முறையில் நாட்டு மக்களுக்கு எரி பொருளை பெற்றுக் கொடுக்க தற்போதைய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதும் எதிர் கட்சியினர் சிறு பிள்ளை தனமாக கருத்துக்களை முன் வைத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர்  எம்.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (16) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,,,


மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கையில் ஏப்ரல் மாதம் வரை போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் பதற்ற மடைந்து அதிகளவில் எரிபொருளை கொள்வனவு செய்வதைத் தவிர்க்கவும், செயற்கையான தட்டுப்பாட்டை தடுக்கவும் நேற்று முதல் QR முறையின் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


 தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை அடுத்த மூன்று நாட்களுக்கு இ.போ.ச (SLTB) டிப்போக்களில் பெற்றுக்கொள்ள முடியும்.வடமாகாணத்தில் அரச அதிபர் பணிமனைக்கு அருகே உள்ள எரிபொருள் நிலையங்களில் பேருந்துகளுக்கு டீசல் வழங்க விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


   விவசாய நடவடிக்கைகளுக்காக வாரத்திற்கு 25 லிட்டர் எரிபொருள் டிராக்டர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

   வவுனியா போன்ற மாவட்டங்களில் சிறுபோக பயிர்ச்செய்கை மற்றும் அறுவடை பணிகள் நடைபெறுவதால், மேலதிக எரிபொருள் தேவை குறித்து ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.


 எரிபொருள் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்ற அந்த நாடுகளிலே மக்கள் பாரிய வரிசையிலே எரி பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் எங்களுடைய நாட்டிலே நாங்கள் அவற்றை சரியான முறையில், QR நடைமுறையினூடாக மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வழங்க இருக்கிறோம். 


அத்தோடு வரும் வாரங்களில் வரிசையிலே அவ்வாறு இருக்கக்கூடிய ஒரு நிலைமை ஏற்படின், அந்த வரிசையிலே நின்று எரிபொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க இருக்கிறோம். குறிப்பாக அவர்களுக்குரிய மலசலகூட வசதிகள், அதேபோல் அவர்கள் வெயிலில் நிற்காத வகையிலே ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கின்றன.


அதுமட்டுமல்லாமல், வடக்கு மாகாணத்தில் உள்ள அரசாங்க அதிபர்கள் தலைமையிலே உடனடியாக நாங்கள் ஒரு கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்திருக்கின்றோம்.  வவுனியா மாவட்டத்திலே கலந்துரையாடல் இடம்பெற இருக்கின்றது.


 அதேபோல நாளை தினம் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற இருக்கின்றது. இந்த எரிபொருள் சார்ந்த தொடர்புடைய போக்குவரத்துத் துறை சார்ந்தவர்கள், அதேபோல் பிரதேச செயலாளர்கள், ராணுவத்தினர், பொலிஸார் உட்பட அனைவரும் இந்தக் கலந்துரையாடலில் ஈடுபட்டு, மாவட்ட ரீதியாக ஏற்படுத்த இருக்கின்ற விசேட செயற்றிட்டங்கள் தொடர்பாக கலந்துரையாட இருக்கின்றோம்.


  எரிபொருள் நிலையங்களுக்கு பொலிஸாருடைய பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே மக்கள் பீதி அடையாமல் தங்களுக்குரிய எரிபொருட்களை நீங்கள் அங்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். தொடர்ச்சியாக எரிபொருட்களை வழங்குவதற்கு சீனா, ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. சாதகமான சமிக்ஞைகள் கிடைக்க பெற்றிருக்கின்றன. எனவே அந்த நாடுகளிலிருந்தும் இவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.


  இந்தியாவிலிருந்து வரவிருக்கின்ற இரண்டு கப்பல்கள்   மின்சார உற்பத்திக்கு தேவையான ஆயில்' (Crude Oil) அவற்றினைப் பெற்றுத் தருவதாக இந்தியா கூறியிருக்கின்றது. அவற்றை ஏற்கனவே கொள்வனவு செய்வதற்கு உரிய அனைத்து விதமான நடவடிக்கைகளும் செய்திருக்கின்றோம். உலகின் இந்தப் போர் நடைபெறுகின்ற போக்கு சற்று வித்தியாசமாக இருப்பதனால், வரும் காலங்களிலே நாங்கள் விசேட மாற்றங்களை இந்த எரிபொருள் வழங்குவதில் செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. 


நிச்சயமாக இது தொடர்பாக தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டு நாங்கள் மக்களுக்குத் தேவையான இந்த எரிபொருளை விநியோகிக்க தயாராக இருக்கிறோம். அத்தோடு மீனவர்களுக்கு தேவையான அவர்களின் படகு களுக்குத் தேவையான மண்ணெண்ணெய் விநியோகத்தையும் சீர்படுத்த கூடிய வகையிலே நாங்கள் ஒழுங்குகளை மேற் கொண்டிருக்கின்றோம். 



எரிபொருள் குறித்து எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு


 இந்த எரிபொருள் தொடர்பாக, எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக ஏதோ வேற்று கிரகத்திலிருந்து அல்லது வேறு உலகத்தில் இருந்து வந்தவர்கள் போல எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டு கின்ற நிலைப்பாடு இருக்கிறது. 


இவர்களுக்குப் புரியவில்லையா? உலகிலே ஒட்டுமொத்தமான நாடுகளுமே, முழு உலகமுமே இந்த எரிபொருள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றது. இலங்கை மட்டுமல்ல. இவர்கள் ஒரு சந்தர்ப்பவாதத்தை இங்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.


 அவர்களுடைய இந்தச் சந்தர்ப்பவாதம் எடுபடப் போவதில்லை. மக்களுக்குத் தெரியும், மக்கள் தெளிவாக அறிந்திருக்கிறார்கள் இது ஒட்டுமொத்தமான உலகத்திற்கான ஒட்டுமொத்த பிரச்சனை. இவர்கள் தங்களுடைய ஒரு கீழ்த்தரமான, மலிவான அரசியலை மேற்கொள்வதற்காக இவ்வகையாக கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.


குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற சஜித் பிரேமதாச, குழந்தையை விட மிகவும் மோசமான நிலையிலே அவருடைய மனநிலை காணப்படுகின்றது. அவர் ஏதோ வேற்று கிரகவாசி போல் தன்னுடைய உரையில் பல்வேறுபட்ட விஷயங்களைக் கூறுகிறார்.


 நாட்டிலே QR கோட்டை நடைமுறைப்படுத்தி விட்டதாக கூறுகிறார். அது நாங்கள் மக்களுடைய வசதிக்காக செய்திருக்கின்றோம். மக்களுடைய எரிபொருளைப் பெற்றுக் கொள்கின்ற அந்த நெருக்கடிகள் ஏற்படாமல் அதைக் குறைப்பதற்காக நாங்கள் ஏற்படுத்தி இருக்கின்றோம். 


இதைப் புரியாதவர் போல சிறுபிள்ளைத்தனமாக இவருடைய கூற்றுகள் இருக்கின்றன.

இவர் உண்மையில் அரசியலுக்குப் பொருத்தம் இல்லாதவர் என்ற வகையிலே மக்கள் பேசிக் கொள்வதை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. 


எம்மைப் பொறுத்தவரையிலே எங்களுடைய அரசாங்கம் மக்களுடைய அரசாங்கம் என்ற வகையிலே, தொடர்ச்சியாக மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களை நீக்கக் கூடிய வகையிலான செயல்பாடுகளை நிச்சயமாக எங்களுடைய திட்டமிடல்கள் ஊடாக நாங்கள் மேற்கொள்வோம். 


மக்கள் பீதி அடையாமல் எரிபொருளைக் கொள்வனவு செய்து சேமித்து வைக்க வேண்டும் என்ற வகையிலே ஈடுபடாமல் இருப்பது நல்லது என்று நினைக்கின்றேன். அத்தோடு மக்கள் பொதுப் போக்குவரத்தை கூடுதலாகப் பயன்படுத்துவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.


 அதுமட்டுமல்லாமல் ஏனைய பொருட்கள் விலைவாசிகள் தொடர்பாகவும் பல்வேறுபட்ட ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. எனவே எது எவ்வாறு இருப்பினும் எங்களுடைய அரசாங்கம் தெளிவான நிலையில் இருக்கிறது. மக்களுக்கு எரிபொருள் விநியோகத்தை சரியான முறையில் வழங்க வேண்டும் என்று நிச்சயமாகப் பாதிக்கப்படாத வகையிலே எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ச்சியாக எமது அரசாங்கம் வழங்கும்.


 கடல் மூலம் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் அதிகரிப்பு


"உண்மையிலேயே இந்த போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்து, இலங்கை மக்களை போதைப்பொருள் அடிமையாக்கின அந்தப் பெருமை  கடந்த கால அரசாங்கங்களைச் சாரும்.


அவர்களுடைய அரசியலை நிலைநிறுத்திக்கொள்ளவும், அவர்கள் தங்களை வளப்படுத்திக்கொள்ளவும், தங்களது உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் பணக்காரர்களாக்குவதற்கு அல்லது வசதி வாய்ப்புள்ளவர்களாக ஆக்குவதற்கு மக்களைப் பலிக்கடா ஆக்கினார்கள் இந்தப் போதைப்பொருள் ஊடாக.


அவர்களுடைய செயல்பாட்டின் காரணமாகத்தான் இந்தப் போதைப்பொருள் மிகவும் மோசமான நிலையிலே இலங்கையிலே வியாபித்திருக்கின்றது. பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையிலே நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்திலே கூறியபடி, போதைப்பொருளை முழுமையாக இந்த நாட்டிலிருந்து அழித்தொழிப்பதற்குரிய நடவடிக்கைகளை நாங்கள் ஜனாதிபதி தலைமையிலே விசேட செயற்திட்டங்களூடாக நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.


  கடந்த காலங்களிலே பாரிய அளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்ற படுவதோடு, போதைப் பொருட்களைக் கொண்டு வருபவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக அண்மையிலே 600 கிலோகிராமிற்கு மேலதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.பயங்கரமான ஆயுதங்கள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.


கூடுதலாக ஆழ்கடல் தொழிலிலே தொடர்ச்சியாக வாரக்கணக்கில் இருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்ற சில படகுகள் இந்தப் போதைப்பொருள் வியாபாரத்தில் அல்லது போதைப்பொருள் பரி மாற்றுவதில் முக்கியமாகப் பங்கு வகிக்கின்றது. எனவே இவற்றின் துரிதமான கண்காணிப்பு, கடற்படையினருடைய அர்ப்பணிப்பான செயல்பாட்டின் ஊடாக நிச்சயமாக இவற்றை நாங்கள் கட்டுப்படுத்துவோம்.


அதேபோல நாங்கள் இவ்வாறு ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுகின்ற படகு உரிமையாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம், தயவுசெய்து இவ்வகையான மோசமான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம். இது எமது எதிர்கால சந்ததியினரை முழுமையாக இருள் சூழ்ந்த ஒரு மோசமான சூழலுக்கு தள்ளிவிடும். 


எனவே தயவு செய்து இந்த நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.எங்களுடைய அரசாங்கத்தினுடைய நடவடிக்கை போதைப்பொருளுக்கு எதிராக தொடர்ச்சியாக இருக்கும். அதற்கு முழு நாடுமே ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நாங்கள்  கேட்டுக்கொள்கிறோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.





நாட்டு மக்களுக்கு சீரான முறையில் எரி பொருளை பெற்றுக் கொடுக்க தற்போதைய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது போதும் எதிர் கட்சியினர் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கின்றனர். Reviewed by Vijithan on March 16, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.