அண்மைய செய்திகள்

recent
-

எரிபொருள் விலை குறித்து ஜனாதிபதி மறைமுக அறிவிப்பு

 எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்கு என்றும், அதற்கமைய எரிபொருள் விலையை அதிகரிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக, நாட்டில் ஒரு லீற்றர் டீசல் விலை 720 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


இருப்பினும், அரசாங்கம் ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாய் செலவிட்டு, 392 ரூபாய் என்ற விலையில் மக்களுக்கு வழங்கி வருவதால் எரிபொருள் கூட்டுத்தாபனம் நட்டத்தைச் சந்தித்து வருவதாகவும், இதனை நீண்ட காலத்திற்கு முன்னெடுக்க முடியாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.


அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:


"பெப்ரவரி மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக 98 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டது. மார்ச் மாதத்தில் 216 மில்லியன் டொலர்களும், ஏப்ரல் மாதத்தில் 368 மில்லியன் டொலர்களும் செலவாகியுள்ளன. மே மாதத்தில் 522 மில்லியன் டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 6 மடங்குக்கும் அதிகமான எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நாம் ஒரு சவாலுடன் தான் பொருளாதாரத்தை நிர்வகிக்க வேண்டியுள்ளது.


டீசல் லீற்றர் ஒன்றின் விலை சுமார் 720 ரூபாய் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது. ஆனால் நாம் 392 ரூபாய்க்கு வழங்குகிறோம். அரசாங்கம் 100 ரூபாய் சுமையை ஏற்கிறது. அப்போது கூட்டுத்தாபனத்திற்கு 492 ரூபாய் கிடைக்கிறது. அங்கேயும் அவர்களுக்குப் பெரிய நட்டம் உள்ளது. அந்த நட்டத்தை ஈடுசெய்ய வேண்டும். கடந்த கால அரசாங்கங்களின் முறையற்ற நிர்வாகத்தால் ஏற்பட்ட 84 பில்லியன் ரூபாய் நட்டத்தை அரசாங்கமே ஏற்றுள்ளது.


மின்சாரக் கட்டணமும் அப்படித்தான். எரிபொருள் விலை அதிகரிப்பால் இன்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கும் நாம் ஒரு நிவாரணத்தை வழங்குவோம். மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிக்கப்பட்ட போது, 95% மக்களுக்கு அந்த அதிகரிப்பு பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 5% மானவர்களுக்கு மாத்திரமே கட்டணம் அதிகரித்தது.


ஆனால் திறைசேரியிலிருந்து தொடர்ச்சியாகப் பணம் வழங்கி எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபையைப் பராமரிக்க முடியாது. அவற்றை வினைத்திறன் மிக்கதாக மாற்ற வேண்டும்.


எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் இலக்கு எமக்கு உள்ளது. அதிக விலைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யப்படும் போது, பழைய முறையிலேயே பயன்பாடு இருந்தால் டொலர்கள் வெளியேறுவது அதிகரிக்கும். எனவே தான் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் சில தீர்மானங்களை எடுத்துள்ளோம். எரிபொருள் தொடர்பான தீர்வுகளை விரைவில் வழங்க முயற்சிப்போம்." எனத் தெரிவித்தார்.





எரிபொருள் விலை குறித்து ஜனாதிபதி மறைமுக அறிவிப்பு Reviewed by Vijithan on May 13, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.