அண்மைய செய்திகள்

recent
-

ஏறாவூரை உலுக்கிய பகீர் வீடியோ பின்னணி!

 ஏறாவூரில் வீதியால் தனியாகச் சென்ற 16 வயது சிறுவன் ஒருவரைக் கடத்திச் சென்று, ஆடைகளைக் களைந்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக 16 வயதுடைய சிறுவன் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் நேற்று (15) கைது செய்துள்ளனர்.


பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,


ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி மற்றும் தளவாய் ஆகிய பிரதேசங்களில் 15, 16, 17 வயதுடைய சிறுவர்களைக் கொண்ட மூன்று வாள்வெட்டுக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த சிறுவர் குழுக்களை அந்தப் பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரே பின்னணியில் இருந்து இயக்கி வருவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இக்குழுக்கள் மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்றும் கோடாரிகளுடன் நடமாடி வருவதாகக் கூறப்படுகிறது.
 

கடந்த நோன்புப் பெருநாள் காலத்தில், இரவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றைப் பார்வையிட்டு வீடு திரும்பிய ஒரு குழுவினர் மீது, எதிர்த்தரப்பு குழுவினர் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இக்குழுக்களுக்கிடையே நிலவி வந்த மோதலின் காரணமாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இதன் தொடர்ச்சியாக, பழிவாங்கும் நடவடிக்கையாக வீதியால் தனியாகச் சென்ற எதிர்த்தரப்புக் குழுவைச் சேர்ந்த சிறுவன் ஒருவரை ஏனைய குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர். ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட அச்சிறுவன், மரமொன்றில் தலைகீழாகக் கட்டப்பட்டு, ஆடைகள் களையப்பட்டுக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
 

பாதிக்கப்பட்ட சிறுவன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இவ்வாறு கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டதில், படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அண்மையிலேயே சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.


இந்த நிலையில், அச்சிறுவனைக் கடத்தித் தாக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகிப் பரவியதை அடுத்து, சிறுவனின் தாயார் நேற்று திங்கட்கிழமை ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.



இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், தாக்குதலை நடத்திய அந்தப் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவரைக் கைது செய்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் தலைமறைவாகியுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஏறாவூர் பொலிஸார், தலைமறைவாகியுள்ள ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.


ஏறாவூரை உலுக்கிய பகீர் வீடியோ பின்னணி! Reviewed by Vijithan on June 16, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.