மன்னார் நீதிமன்றில் நடந்தது என்ன? உண்மையை விளக்கி 40 சட்டத்தரணிகள் இணைந்து அறிக்கை

40 ற்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் கையொப்பமிட்டு நேற்று முன்நாள் மாலை வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
18-07-2012 புதன்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் நீதிமன்றத்துக்கு வெளியில் ஒரு சாரார் கோஷங்களை எழுப்பிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரம்பத்தில் எமக்குக் கிடைத்த தகவலின்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் உப்புக்குளத்தைச் சேர்ந்த முஸ்ஸிம் மக்கள் என்றும் அவர்கள் ஜோசப் வாஸ் நகர் மக்களோடு ஏற்பட்ட பிணக்கு தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் அறிந்தோம்.
சக சட்டத்தரணிகள் சிலர் நீதிமன்றத்துக்கு வெளியில் சென்று ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தி அவர்களை கலைக்குமாறு பொலிஸாரிடம் கோரியிருந்தனர். பல நிமிடங்கள் கழிந்தும்கூட பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து இரு சட்டத்தரணிகள் மன்றுக்கு வெளியில் சென்று அவதானித்த வேளையில் கனம் நீதிபதி அவர்களை தனிப்பட்ட முறையில் நிந்தனை செய்யும் தூசண வார்த்தைகளைப் பிரயோகித்துக் கொண்டு நீதிபதியை அநாகரிகமாக சித்தரிக்கும் வகையில் பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்கார்கள் ஏந்திக்கொண்டிருந்ததைக் கண்டனர்.
உடனடியாக நீதிபதியின் கவனத்துக்கு அதனைக் கொண்டு சென்றனர். இதனால் நீதிபதி மன்றின் நடவடிக்கைகளை இடைநிறுத்திக்கொண்டார். இவை நடைபெறும் பொழுது காலை 11 மணியிருக்கும்.
இதன் பிற்பாடு நீதிபதி தமது உத்தியோகபூர்வ அறைக்குச் சென்று வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் இருவரையும் அழைத்து கூட்டத்தினைக் கட்டுப்படுத்தி அவர்களைக் கலைக்கும்படி கட்டளையை வழங்கினார்.
இதன் பிற்பாடு நீதிபதி தமது உத்தியோகபூர்வ அறைக்குச் சென்று வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் இருவரையும் அழைத்து கூட்டத்தினைக் கட்டுப்படுத்தி அவர்களைக் கலைக்கும்படி கட்டளையை வழங்கினார்.
15 நிமிடங்கள் கழிந்த நிலையிலும்கூட ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைக்கப்படவில்லை. எனவே நீதிபதி இரண்டாவது முறையாகவும் பொலிஸ் அதிகாரிகளை அழைத்து மீண்டும் தனது கட்டளையைச் செயற்படுத்துமாறு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக கூட்டத்தினர் கலைந்து பின்வாங்கிச் சென்றனர். பிற்பாடு வன்செயலில் ஈடுபட்டு முதலில் பொலிஸாருக்கும் பின்னர் நீதிமன்றக் கட்டடத்துக்கும் கற்களை வீசித் தாக்குதல் நடாத்தத் தொடங்கினர்.
இதனால் சில பொலிஸார் காயமுற்றும் மேல் நீதிமன்ற ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் மாவட்ட நீதிமன்றக் கட்டட ஜன்னல் கண்ணாடிகளும் நொருக்கப்பட்டன. நீதிமன்றப் பெயர்ப்பலகைகளும் உடைக்கப்பட்டன.
இந்த வேளையில் கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி கல்லெறிக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல் இருக்க தனது அறையை விட்டு வெளியேறி மாவட்ட நீதிபதியின் உத்தியோகபூர்வ அறைக்குள் பிரவேசித்தார்.
நிலைமை மோசமடைந்து போய்க்கொண்டிருப்பதால் அதனைக் கட்டுப்படுத்த கலகக்காரர்களைச் சுட்டாவது கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நிலைமை நிமிடத்திற்கு நிமிடம் மோசமடைந்தமையினாலும் கலகக்காரர்கள் நீதிமன்றுக்கு உள்ளே வந்து தாக்கக்கூடிய சூழ்நிலை காணப்பட்டமையாலும் நீதிபதி நீதிமன்ற பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வந்து, கலகம் விளைவிப்பவர்களை முழங்காலுக்குக் கீழ் சுட்டாவது கைது செய்யும்படி ஓர் உத்தரவை பொலிஸாருக்குப் பிறப்பித்தார்.
நீதிபதியின் அந்த உத்தரவைப் பொலிஸார் நடைமுறைப்படுத்தாது நீதிபதி அவர்களை உத்தியோகபூர்வ அறைக்குச் செல்லும்படியும் தாம் கும்பலைக் கைது செய்வதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் அப்படி எதுவும் நடக்காததன் காரணத்தாலேயே நீதிபதி மன்னார் இராணுவத்தின் உதவியைக் கோரியிருந்தார். இராணுவத்தினர் சுமார் 12.50 மணியளவில் வந்துசேர்ந்து கலகக்காரர்களை விரட்டியடித்தனர்.
கூட்டம் கலையத் தொடங்கியதன் பிற்பாடு, ஏற்பட்ட சேதங்களை சுமார் 1.00 மணியளவில் நீதிபதியும், சட்டத்தரணிகளும் பார்வையிட்டனர். அந்த வேளையில் நீதிமன்ற அலுவலகத்துக்கு முன்பாக இருக்கின்ற வேப்பமரத்தடியில் நின்றிருந்த நீதிபதிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அதற்குப் பதில் அளித்த நீதிபதி, "அமைச்சரே! உங்களுக்கு நான் ஏற்கனவே சொன்னேன்தானே வழக்குத் தொடர்பாக என்னுடன் கதைக்க வேண்டாம் என்று. இனி இவ்வாறு தொலைபேசி எடுப்பீர்களேயானால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' எனக்கூறி தொலைபேசித் தொடர்பை துண்டித்ததை அங்கிருந்த நாம் கண்டோம்.
இதன் பின்னர் சட்டத்தரணிகளாகிய நாங்கள் நீதிபதியிடம் யார் தொலைபேசியில் உரையாடியது எனக் கேட்டோம். அமைச்சர் ரிஷாத் பதியுதீன்தான் அழைப்பை எடுத்தார் என்றும், அவர் இதே போன்று அதற்கு முந்தைய தினமும் தனக்கு அழைப்பை எடுத்து "நீர் வழங்கிய தீர்ப்பினால் மன்னார் நகரம் பற்றி எரியப் போகின்றது'' எனக் கூறியிருந்தார் எனவும் தெரிவித்தார்.
அன்றைய தினம் எடுத்த அழைப்பில் தான் ஏற்கனவே சொன்னது மாதிரியே மன்னார் நகரம் பற்றி எரிவதைப் பார்த்தீரா என்று தன்னிடம் அமைச்சர் வினவினார் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
நடந்த விடயங்கள் இவ்வாறிருக்க சில ஊடகங்கள் உண்மையான சம்பவங்களை திரிவுபடுத்தி, கூட்டம் ஆரம்பத்தில் வீதியை மறித்து வீதியில் அமர்ந்திருக்கும் படங்களை எடுத்தும், இடையில் நடந்த விடயங்களை முற்றுமுழுதாக மறைத்து விட்டு, நீதிபதி பெண்களை நோக்கி கையைக்காட்டி அவர்களைச் சுட்டுப் பிடிக்கும்படி உத்தரவிடும்படியான கட்டளையை வழங்குவது போன்ற காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன.
உண்மையிலேயே ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை இடம்பெற்ற சம்பவங்களை சட்டத்தரணிகளாகிய நாங்கள் நேரடியாகவே கண்டிருக்கின்றோம்.
அப்படியிருக்க உண்மைக்கு புறம்பாக ஒரு சில ஊடகங்கள் திரிவுபடுத்தி செய்திகள் வெளியிடுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இனிமேலும் இவ்வாறான திரிவுபடுத்தப்பட்ட செய்திகள் வெளியிடுவதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று அந்த ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றுள்ளது.
மன்னார் நீதிமன்றில் நடந்தது என்ன? உண்மையை விளக்கி 40 சட்டத்தரணிகள் இணைந்து அறிக்கை
Reviewed by NEWMANNAR
on
July 26, 2012
Rating:

No comments:
Post a Comment