மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கட்டட நிர்மாணப் பணிக்கு 416 கோடி 20 இலட்சம் ரூபா ஒதுக்கீடு.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குத் தேவையான கட்டட வசதியை ஏற்படுத்துவதற்கு416 கோடி 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் க . முருகானந்தன் தெரிவித்தார் .
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குழுக்கூட்டம் அதன் தலைவரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான இராஜன் மயில்வாகனம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது . இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
அவர் மேலும் கூறுகையில் ,
சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் முகவர் நிலையம் 300 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது . அவுஸ்திரேலிய நிறுவனத்தின் உதவித் திட்டத்தின் மூலம் 80 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது . இந்த நிதியின் மூலம் அவசர விபத்துப்பிரிவு ஸ்தாபிக்கப்படவிருக்கின்றது . இதற்குரிய 5 மாடிக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது . மேலும் , 4 மாடிக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு 2 கோடி ரூபாயும் புற்று நோய் சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான கட்டடத்தை பூர்த்தி செய்ய 30 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது . மேலும் , தற்போதுள்ள கடடங்களை அபிவிருத்தி செய்வதற்கு 3 கோடி ரூபாயும் கட்டடங்களை புனரமைப்பதற்கு 120 இலட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது . இது தவிர உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 520 இலட்சம் ரூபாயும் இரசாயன பதார்த்தங்களுக்காக ஒரு கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது .
இதேவேளை , சவச்சாலை அமைக்கும் பணி கிழக்கு பல்கலைக்கழகத்தினூடாக உயர் கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது . எனவே , இன்னும் இரண்டு வருட காலத்துள் கட்டட வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு வைத்தியசாலை பௌதீக வளத்தில் தன்னிறைவைப் பெறவுள்ளது .
இருப்பினும் வைத்தியசாலை கட்டடங்களை அமைப்பதற்கு போதியளவில் நிலம் இல்லாததால் பழைய கட்டிடங்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதிய கட்டடங்களை அமைப்பதற்கு திட்டமிடப் பட்டுள்ளது . மட்டக்களப்பு சிறைச்சாலை வேறிடத்துக்கு மாற்றப்படும்போது அந்த நிலத்தை வைத்தியசாலைக்கு வழங்க வேண்டும் . அத்துடன் வைத்தியசாலைக்கு பின்புறமாக வசிக்கும் மக்களை வேறு இடத்தில் வீடமைப்பு திட்டத்தை ஏற்படுத்தி அங்கு குடியமர்த்த வேண்டும் . இதன் மூலம் வெற்றிடமாகும் நிலத்தையும் வைத்தியசாலைக்கு வழங்க வேண்டும் .
தற்போது இவ்வைத்தியசாலையில் பாரிய இட நெருக்கடி நிலவுகிறது . நாட்டிலுள்ள ஏனைய வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்களை நியமிக்கும் முன்னர் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டு கட்டடம் மற்றும் உபகரணம் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன . ஆனால் வடக்கிலும் கிழக்கிலும் அவ்வாறில்லை . கட்டட உபகரண வசதிகள் பற்றி சிந்திக்காமல் வைத்திய நிபுணர்கள் நியமிக்கப்படுகின்றனர் . பின்பு தமக்கு வசதிகள் இல்லை என்று கூறி இடமாற்றம் பெற்று செல்கின்றனர் .
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கட்டட நிர்மாணப் பணிக்கு 416 கோடி 20 இலட்சம் ரூபா ஒதுக்கீடு.
Reviewed by NEWMANNAR
on
February 04, 2014
Rating:

No comments:
Post a Comment