சிதறல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை காணாமல்போன விமானத்தின் மர்ம முடிச்சுகள் தொடர்கிறது
கோலாலம்பூர்: காணாமல்போன மலேசிய விமானம் தொடர்பான மர்ம முடிச்சுகள் 3 நாளா கியும் இன்னும் நீடிக்கிறது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த சனிக்கிழமை அதிகாலை 12.55க்கு மலேசியன் ஏர்லைன்சை சேர்ந்த போயிங் விமானம் ஒன்று 227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் சீன தலைநகர் பீஜிங்க்கு புறப்பட்டு சென்றது.
ஆனால், கிளம்பிய ஒரு மணி நேரத்தில் விமானம் காணாமல் போய்விட்டது. கடலில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், அதன் ஒரு சிதறலை கூட இதுவரையில் தேடுதல் படையினரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மலேசிய விமான போக்குவரத்துறை தலைவர் அஜாருதீன் அப்துல் ரஹ்மான் நேற்று அளித்த பேட்டியில், ‘‘துரதிர்ஷ்டவசமாக, காணாமல் போன விமானத்தில் ஒரு பாகத்தையோ அல்லது அந்த விமானத்தையோ இதுவரையில் கண்டறிய முடியவில்லை. காணாமல் போன விமானத்தின் மர்மம் தொடர்கிறது. எங்களால் எவ்வளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு முயற்சி மேற்கொண்டு விமானத்தை தேடி வருகிறோம்.
இந்த விமானம் தானாகவே விபத்துக்குள்ளாகி எங்காவது விழுந்ததா அல்லது தீவிரவாதிகள் கடத்தி அதை விபத்துக்கு உள்ளாக்கினார்களா என்று எல்லா கோணங்களிலும் விசாரணை நடக்கிறது’’ என்றார். காணாமல் போன விமானத்தில் பயணம் செய்த 2 பேரின் பாஸ்போர்ட்கள் இத்தாலி மற்றும் ஆஸ்திரியாவில் காணாமல்போனதாக புகார் செய்யப்பட்டுள்ளது. அதாவது திருட்டு பாஸ்போர்ட்டில் 2 பேர் விமானத்தில் பயணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதில் ஒருவரின் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும், அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் தீவிரவாதிகளா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் மலேசிய போலீ சார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, விமானம் குறித்து தனது கடல்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள வியட்நாம் கடற்படையினர், நேற்று உயிர்காக்கும் படகுபோன்ற ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இது காணாமல்போன விமானத்தில் இருந்து விழுந்ததா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக வியட்நாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிதறல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை காணாமல்போன விமானத்தின் மர்ம முடிச்சுகள் தொடர்கிறது
Reviewed by NEWMANNAR
on
March 11, 2014
Rating:

No comments:
Post a Comment