செட்டிக்குளம் தடுப்பு முகாமில் இருந்து இராணுவம் அழைத்துச் சென்ற எனது மகள் எங்கே?- ஜனாதிபதி ஆணைக்குழு முன் தாய் கண்ணீர் மல்க சாட்சியம்.
செட்டிக்குளம் (சோன்-04) தடுப்பு முகாமில் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்ட தனது மகளை இராணுவத்தினர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்ற நிலையில் தனது மகள் காணாமல் போயுள்ளதாக விடத்தல் தீவு கிராமத்தைச் சேர்ந்த ராமக்கிளி புவனேஸ்வரி எனும் தாய் இன்று(8) வெள்ளிக்கிழமை மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்ற காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்துள்ளார்.
அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவிக்கையில்,,,,
எனது மகளான ராமக்கிளி கீர்த்திகா(தரம்-10) படித்துக்கொண்டிருந்த மாணவி இடம் பெற்ற யுத்தத்தின் காரணமாக முள்ளிவாய்க்காலில் இருந்து இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரும் போது விடுபட்டு விட்டார்.
அந்த நேரம் தமிழீழ விடுதலைப்புலிகள்(இயக்கம்)கொண்டு போய் விட்டது.
இந்த நிலையில 15-05-2009 அன்று இராணுவத்தின் சுற்றிவளைப்பின் போது எனது மகள் கைது செய்யப்பட்டு செட்டிக்குளம் சோன்-04 தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார்.
தடுத்து வைக்கப்பட்ட எனது மகளை இராணுவத்தினர் தனிப்பட்ட முறையில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
நாங்கள் அன்று முதல் இன்று வரை எல்லா இடங்களுக்கும் அறிவித்ததோடு தேடித்திரிந்தோம்.
ஆனால் எவ்வித பலனும் இல்லை.மகளை காணவில்லை என அனைவருக்கும் சொல்லிச் சொல்லி எனக்கு மனப்பாடமாகி விட்டது.
என்ன செய்வது? என்று தெரியவில்லை.இனி எங்கும் சென்று முறையிடுவதற்கும் இடமில்லை. என காணாமல் போன ராமக்கிளி கீர்த்திகா என்ற மாணவியின் தாயர் ராமக்கிளி புவனேஸ்வரி ஜனாதிபதி ஆணைக்குழு முன் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
செட்டிக்குளம் தடுப்பு முகாமில் இருந்து இராணுவம் அழைத்துச் சென்ற எனது மகள் எங்கே?- ஜனாதிபதி ஆணைக்குழு முன் தாய் கண்ணீர் மல்க சாட்சியம்.
Reviewed by NEWMANNAR
on
August 09, 2014
Rating:

No comments:
Post a Comment