என்னைக் கைது செய்ய முயற்சி-மஹிந்த ராஜபக்ஷ
எனது மீள்வருகை அரசாங்கத்திற்கு அச்ச த்தை ஏற்படுத்தியுள்ளது. புலம் பெயர் அமைப்புக ளின் தேவைக்காக என்னை கைதுசெய்ய முயற்சிக்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பழிவாங்கலின் பின்னணியில் பிரதமர் ரணிலே உள்ளார். என்னையும் குற்றவாளியாக்கி பழிவாங்கவே ரணில் முயற்சிக்கின்றார். ஆனால் சவால்களுக்கு முகங்கொடுக்க நான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார். யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உறவினர்களை நேற்று நாராஹேன்பிட்டி அபேயராம விகாரையில் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், இந்த நாட்டை தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டெடுக்க நாம் பாரிய தியாகத்தை செய்தோம். இராணுவ வீரர்களின் தியாகமும் எனது அரசாங்கத்தின் துணிச்சலுமே இந்த நாட்டை வெற்றிகொண்டது. ஆனால் அவை அனைத்தையும் இன்றுள்ள அரசியல்வாதிகள் மறந்துவிட்டனர். அன்று இருந்த நிலைமை இன்று நாட்டில் இல்லை. இராணுவமும் மக்களும் புறக்கணிக்கப்பட்டு விட்டனர். அன்று எம்முடன் இருந்தவர்கள் இன்று விலை போய்விட்டனர். சேரக்கூடாத கூட்டணிகள் இன்று ஒன்றாக சேர்ந்து சதி செய்கின்றன. நாட்டில் அபிவிருத்திகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இராணுவ வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கிடைக்க வேண்டுய சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. நான் சரியான பொருளாதார வளர்ச்சியில் இந்த நாட்டை ஒப்படைத்தேன். ஆனால் புதிய அரசாங்கத்தின் குறுகிய காலத்தில் பொருளாதாரம் வீழ்ச்சிகண்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கான நிதி அரசாங்கத்திடம் இல்லை. அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவம் மோசமான நிலையில் உள்ளது. குறுகிய காலத்திலேயே இந்த அரசாங்கம் முட்டி மோதிவிட்டது. நாட்டை எப்படி ஆட்சி செய்வது என்பது இவர்களுக்கு தெரியவில்லை. இந்த நாட்டு மக்களை பாதுகாத்தது யார் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். நான் மக்களுக்கு செய்த நன்மைகளை மறந்துவிட வேண்டாம். நாட்டில் மீண்டும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலைமை ஏற்பட்டுள்ளது. இராணுவத்தை பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது,.ஆனால் இந்த அரசாங்கம் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை. புலம்பெயர் அமைப்புகளின் தேவைகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றும் வகையில் செயற்படுகின்றது. அரசாங்கம் முழுமையாக பழிவாங்கலையே செய்கின்றது. புலம்பெயர் அமைப்புகளின் தூண்டுதலில் என்னையும் கைது செய்ய பிரதமர் ரணில் முயற்சிக்கின்றார். அரசாங்கம் எமது உறுப்பினர்களை கைது செய்வதன் பின்னணியில் புலம்பெயர் அமைப்புகளின் தூண்டுதல் உள்ளது. என்மீது குற்றம் சாட்டுவதும் எனது குடும்பத்தை குற்றவாளியாக்குவதும் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பழிவாங்கல் மட்டுமேயாகும். நான் தேர்தலில் தோற்றதும் அமைதியாக நாட்டை புதிய அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டேன். நான் அமைதியாக இருந்தாலும் மக்கள் என்னை அமைதியாக செயற்பட அனுமதிக்கவில்லை. அதனால் தான் நான் மக்களை சந்திக்க வந்தேன். ஆனால் எனது மீள் வருகை இந்த அரசாங்கத்திற்கு அச்சத்தை ஏற்படுத்திவிட்டது. என்னை கண்டு இவர்கள் அஞ்சுகின்றனர். இவர்களுக்கு சவாலான நபர்களை கைது செய்து சிறையில் அடைக்கப் பார்க்கின்றனர். எனது ஒரு சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றைய சகோதரர் மீது அரசாங்கம் இலக்கு வைத்துவிட்டது. நாமும் இவர்களின் இலக்காக மாறிவிட்டேன். ஆனால் நான் சவால்களுக்கு முகம் கொடுக்க தயாராக உள்ளேன். எந்த குற்றச்சாட்டையும் எதிர்கொள்வேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
என்னைக் கைது செய்ய முயற்சி-மஹிந்த ராஜபக்ஷ
Reviewed by Author
on
May 13, 2015
Rating:
Reviewed by Author
on
May 13, 2015
Rating:


No comments:
Post a Comment