
அவுஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் மரின் கரோலினாவும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சீனாவின் சென் லாங்கும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
சிட்னியில் அவுஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் இடம்பெற்றது. இதன் இறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன.
மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 3 ஆவது இடத்திலுள்ள ஸ்பெயின் மரின் கரோலினா, சீனாவின் ஷிஜியன் வாங்கை எதிர்கொண்டார்.
இறுதிப்போட்டியில் அபார திறமையை வெளிப்படுத்திய கரோலினா 22–20, 21–18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் ஆனார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சீனாவின் சென் லாங், டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸல்சென் மோதினர்.
முதல் செட்டை 21–12 என்ற புள்ளிகள் கணக்கில் சென் லாங் கைப்பற்றினார். 2 ஆவது செட்டில் சுதாரித்த ஆக்ஸல்சென் 21-14 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினார்.
இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3 ஆவது செட்டை 21-18 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய சென் லாங் சாம்பியன் பட்டம் வென்றார். இப்போட்டி ஒரு மணி நேரம் 17 நிமிடம் நீடித்தது. சென் லாங்குக்கு இது முதல் அவுஸ்திரேலிய ஓபன் பட்டமாகும்.
ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் தென் கொரியாவின் லீ யோங் டே, யூ யோன் சியோங் ஜோடி, சீனாவின் லியு செங், லு கய்ன் ஜோடியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது.
அதேவேளை, மகளிர் இரட்டையர் பிரிவில் சீனாவின் டாங் யுவான் டிங், மா ஜின் ஜோடி சக நாட்டு வீராங்கனைகளான டாங் ஜின்குவா, டியான் யிங் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
No comments:
Post a Comment