ஓமலூர் இன்ஜினியரை அடித்துக் கொன்றது ஏன்?
சேலம் மாவட்டம் ஓமலூர் சந்தைபேட்டையை சேர்ந்தவர் ேகாகுல்ராஜ் (22). இன்ஜினியர். இவர் கடந்த 24ம் தேதி பள்ளிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். கோகுல்ராஜ் பிரேத பரிசோதனை கடந்த 27ம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் நடந்தது. அவர் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. முதல் கட்டமாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருப்பது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின் நேற்று முன்தினம் போராட்டத்தை வாபஸ் பெற்ற அவரது தாய் சித்ரா மற்றும் அவரது உறவினர்கள் நேற்று மதியம் கோகுல்ராஜ் சடலத்தை பெற்றுக்கொண்டனர். பின்னர் அவரது சொந்த ஊரான ஓமலூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உள்பட பலர் பங்கேற்றனர். இதையொட்டி ஓமலூர் பகுதியில் மேற்கு மண்டல ஐ.ஜி சங்கர் தலைமையில் 5 மாவட்ட எஸ்பிக்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கைதானவர்கள் சிறையில் அடைப்பு: கோகுல்ராஜ் கொலை தொடர்பாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த டிரைவர் சதீஷ்குமார், ரஞ்சித்குமார், அவரது தம்பி தர், சிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ், காகித ஆலை ஊழியர் சந்திரசேகரன், அவரது மனைவி ஜோதிமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய விசாரணை நடத்தப்பட்டது. இதில் தீரன் சின்னமலை பேரவை நிர்வாகி யுவராஜ் உத்தரவின் படி கோகுல்ராஜை கோயிலில் இருந்து கடத்தி அவரிடம் ஒ்ப்படைத்ததாகவும், அவரை யுவராஜ் உள்பட மேலும் சிலர் சேர்ந்து கொலை செய்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது: நாங்கள் அனைவரும் யுவராஜின் உறவினர்கள். சங்ககிரி, திருச்செங்கோடு பகுதியில் காதல் ஜோடிகளை கண்காணிப்பார். அதில் தங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் காதலிப்பது தெரிந்தால் எச்சரித்து அனுப்புவார். மாற்று சமூகத்தினர் யாரேனும் எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை காதலித்தால் அவர்களை அடித்து விரட்டுவார். கடந்த 23ம் தேதி கோகுல்ராஜ், தனது தோழியுடன் கோயிலுக்கு சென்றது யுவராஜூக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற யுவராஜ், சிவக்குமார், அருண் ஆகியோர் அங்கிருந்த மற்ற காதல் ஜோடிகளை விரட்டி அனுப்பினர். பின்னர் எங்களை அனுப்பி கோகுல்ராைஜையும், தோழி ஸ்வாதியையும் தனித்தனியாக அழைத்து வரும்படி தெரிவித்தார். ஸ்வாதியை ஜோதி அழைத்து சென்று பஸ் ஏற்றி அனுப்பி வைத்தார். கோகுல்ராஜை யுவராஜிடம் ஒப்படைத்து விட்டு நாங்கள் வேறு பணிக்கு சென்று விட்டோம்.
பின்னர் சிறிது ேநரம் கழித்து யுவராஜ், செல்வராஜூக்கு போன் செய்தார். கோகுல்ராஜை அடித்து கொலை செய்து விட்டதாகவும், எங்களை தலைமறைவாக இருக்கும்படியும் கூறினார். நாங்கள் ஒன்றும் தெரியாதது போல் ஒதுங்கிக்கொண்டோம். கோகுல்ராஜ் சடலம் பள்ளிபாளையம் ரயில்வே பாதையில் கிடந்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதன் பின்னர் நாங்கள் யுவராஜை தொடர்பு கொள்ளமுடியவில்லை. இவ்வாறு கைதானவர்கள் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
விசாரணைக்கு பின்னர் அவர்கள் நேற்று காலை திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கொலையில் தன்னை போலீசார் தேடி வருவதை அறிந்த யுவராஜ் தலைமறைவானார். அவர் சென்னையில் ஆளும்கட்சி ஆதரவு எம்எல்ஏவிடம் அடைக்கலம் புகுந்திருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் அந்த எம்எல்ஏ தனக்கும், யுவராஜூக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்து விட்டார். சென்னையில் அவர் பதுங்கியிருக்கலாம் என்பதால் அங்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் நீதிமன்றத்தில் சரணடையவும் யுவராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஓமலூர் இன்ஜினியரை அடித்துக் கொன்றது ஏன்?
Reviewed by NEWMANNAR
on
July 03, 2015
Rating:

No comments:
Post a Comment