படையினர் அடைத்த கால்வாய்களை அவர்களே துப்புரவு செய்ய வேண்டும்: வடக்கு முதல்வர்
யாழ்.குடாநாட்டில் போர்க்காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக படையினர் மூடிய கால்வாய்களை அவர்களே திறக்க வேண்டும். அவர்கள் இப்போது இங்கே சும்மா தானே இருக்கிறார்கள் என தெரிவித்திருக்கும் மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்,
குறித்த விடயம் தொடர்பில் படையினருடன் பேச வேண்டும் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
நேற்று மாகாண சபையில் 2016ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் முதலமைச்சர் அமைச்சுக்கான ஒதுக்கீட்டின் மீதான விவாதம் நடைபெற்றிருந்தது.
இதன்போது, மாகாணசபை உறுப்பினர் க.விந்தன், யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட கால்வாய்கள் போர்க்காலத்தில் விடுதலைப் புலிகள் ஊடுருவலாம் என்ற அச்சத்தில் படையினரால் கம்பிகள் மற்றும் அடைக்ககூடிய பொருட்களை கொண்டு அடைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியிருந்ததுடன்,
தற்போது வரையில் அந்த அடைப்புக்கள் எடுக்கப்படாத நிலையில் பல கால்வாய்கள் தூர்ந்துபோயுள்ளதுடன், பல கால்வாய்களில் கழிவுநீர் உரிய முறையில் கடத்தப்பட முடியாத நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது எனவும்,
இதனால் ஒரு கனமழை பெய்தால் யாழ்.நகர் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்து பேசிய முதலமைச்சர் விந்தன் கூறிய கருத்தை தான் இப்போதே அறிவதாகவும் படையினர்தான் கால்வாய்களை அடைத்தார்கள் என்றார் அவர்களைக் கொண்டே அந்த கால்வாய்களின் அடைப்புக்களை எடுக்க வேண்டும். அவர்களே அதனை துப்புரவு செய்யவேண்டும்.
அவர்கள் இங்கே சும்மாதானே உட்கார்ந்திருந்து கொண்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டதுடன் இது தொடர்பாக படையினருடன் பேசவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு காடழிப்பு நிறுத்தப்பட்டமை வரவேற்கத்தக்கது- முதலமைச்சர்
முல்லைத்தீவு- குமுழமுனை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் காடழிப்பு நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி செயலணி விடுத்திருக்கும் உத்தரவை தாம் வரவேற்பதாக தெரிவித்திருக்கும் வடமாகாண முதலமைச்சர்,
அது மட்டும்போதாது அங்கே தொடர்ந்தும் காடழிப்பு நடப்பதாக நாம் அறிகிறோம். எனவே அவ்வாறு நடைபெறுகின்றதா? என்பதை அவதானிப்பதுடன் அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும் எனவும்,
இது தொடர்பான தகவல்கள் கிடைத்தால் எமக்கு தெரியப்படுத்துங்கள் எனவும் மாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் கேட்டுள்ளார்.
வடமாகாண சபையின் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு அதில் முதலமைச்சர் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதம் நேற்று நடை பெற்றிருந்தது.
இதன்போது பேசிய மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்,
முல்லைத்தீவு- குமுழமுனை காடழிப்பு விடயம் நிறுத்தப்பட வேண்டும். என ஜனாதிபதி செயலணி கடிதம் அனுப்பியுள்ளமையினை சபையில் சுட்டிக்காட்டியதுடன், இதற்காக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர், அவைத்தலைவர், அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு சபையில் நன்றி தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் முல்லைத்தீவில் நடைபெறும் காடழிப்பு சாதாரண விடயமல்ல. மிகவும் பாரதூரமான விடயமாகும்.
அது தொடர்பில் நாங்கள் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியிருந்தோம். எனவே அவர் எடுத்துள்ள நடவடிக்கைகள் வரவேற்கத் தக்கதாக இருக்கின்றது.
இது மட்டும்போதாது தொடர்ந்தும் அந்தப் பகுதியில் காடழிப்பு நடவடிக்கை கொழும்பிலிருந்து வந்தவர்களால் நடப்பதாக எமக்கு தகவல்கள் கிடைக்கின்றன.
எனவே அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அவ்வாறான தகவல்கள் கிடைத்தால் எமக்கு தெரியப்படுத்துங்கள் என அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை முல்லைத்தீவில் மேற் கொள்ளப்பட்டுவரும் குடியேற்றங்கள் தொடர்பாகவும், அமைச்சர் ராஜித சேனாரத்ன வடக்கில் இனிமேல் குடியேற்றங்கள் நடக்காது தெரிவித்த கருத்து தொடர்பாகவும் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் சபையில் தெரிவித்த கருத்துக்கு முதலமைச்சர் பதிலளிக்கையில்,
குடியேற்றங்கள் இராணுவ பின்னணியிலேயே நடக்கின்றன. இராணுவம் எமது மாகாணத்தில் கட்டுப்படுத்தப்பட்டு அல்லது வெளியேற்றப்பட்டால் இவ்வாறான குடியேற்றங்கள் நின்று நிலைக்காது. இதற்காகவே நாங்கள் இராணுவ வெளியேற்றத்தைக் கோரிவருகிறோம்.
மேலும் நாங்கள் இந்த விடயத்தை வெளிநாட்டு பிரதிநிதிகளுடனும் கதைக்கிறோம். ஆனால் அவர்கள் எங்களை அரசாங்கத்துடன் பேசுமாறு கேட்கிறார்கள்.
நாங்கள் அரசுடன் கோபமில்லை. நாங்களும் வாக்களித்தே இந்த ஆட்சி வந்தது. என்பதை அவர்களுக்கு கூறுகிறோம் என்றார்.
படையினர் அடைத்த கால்வாய்களை அவர்களே துப்புரவு செய்ய வேண்டும்: வடக்கு முதல்வர்
Reviewed by Author
on
December 17, 2015
Rating:

No comments:
Post a Comment