அண்மைய செய்திகள்

recent
-

நேபாளத்தில் வேந்தர்மூவிஸ் மதன் சுற்றிவளைப்பு..?- பரபரப்பு தகவல்கள்


வேந்தர் மூவிஸ் மதனை தனிப்படை போலீஸார் நேபாளத்தில் சுற்றி வளைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து கடந்த ஒரு மாதமாக மர்மமாக இருந்த மதன் தலைமறைவு விவகாரம், வெளிச்சத்துக்கு வந்து முடிவை எட்டும் என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.

கடந்த மே மாதம் 29ம் தேதி வேந்தர் மூவிஸ் மதன், காசியில் சென்று கங்கையில் சமாதி அடைவதாகக் கடிதம் எழுதி வாட்ஸ் அப்பில் பரப்பிவிட்டுவிட்டு மாயமாகி விட்டார். அவர் எழுதிய கடிதத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக வசூலித்த பணம் குறித்த விவரங்களும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம் மற்றும் ஐ.ஜே.கே. கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் மீது மதன் புகார் தெரிவித்து இருந்தார். மேலும் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை பாரிவேந்தர் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்தக் கடிதம் அரசியல் மற்றும் சினிமா உலகில் பரபரப்பை உண்டாக்கியிருந்தது.


இந்நிலையில் மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் தெரிவித்தனர். அதே சமயம், மதனைக் கண்டுப்பிடித்து தரும்படி அவரின் தாயார் மற்றும் மனைவிகள் சிந்து, சுமலதா ஆகியோரும் போலீசில் புகார் கொடுத்தனர். மதன் மீது எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம் சார்பிலும் மோசடிப் புகார் கொடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மதன், அவரின் உதவியாளர் மற்றும் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து மதனின் தாயார் தங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில், மதனைக் கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், மதன் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க, கூடுதல் கமிஷனர் ராதாகிருஷ்ணை விசாரணை அதிகாரியாக நியமித்தார்.

இதனையடுத்து போலீஸ் வட்டாரத்தில், "மாயமான மதனை தனிப்படை அமைத்து பல இடங்களில் தேடி வருகிறோம். மோசடி வழக்கு தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தி விட்டோம். பாரிவேந்தரின் மகன் ரவி பச்சமுத்துவிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் மதனின் உறவினர்கள், நண்பர்களின் நடவடிக்கைகளை ரகசியமாகக் கண்காணித்து வந்தோம். அதில் எங்களுக்கு முக்கியமான தகவல் கிடைத்தது. சில நாட்களுக்கு முன்பு மதனின் உறவினர் ஒருவருக்கு செல்போனில் அவர் பேசிய விவரம் தெரிந்தது. உடனடியாக அந்த செல்போன் சிக்னலை வைத்து மதன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்தோம். அந்த சிக்னல் நேபாளத்தை காட்டியது. உடனடியாகத் தனிப்படை போலீஸார் நேபாளத்துக்கு விரைந்தனர். மதன் தங்கி இருக்கும் இடத்தை போலீஸார் நெருங்கி விட்டனர். விரைவில் மதனை கைது செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்" என்றனர்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் சொன்னபடியே தற்போது மதனை நேபாளத்தில் போலீசார் சுற்றிவளைத்துவிட்டதாக காவல் துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. மதனின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் இது தொடர்பாக நாம் விசாரித்ததில் அவர்களும் இதனை உறுதிப்படுத்தினர்.

முன்னதாக மதனின் தாயார் தங்கத்தின் வழக்கறிஞர் இன்ஃபென்ட் தினேஷ் கூறுகையில், "நீதிமன்றத்தில் மதனை நெருங்கி விட்டதாக போலீஸ் தரப்பில் அறிக்கை சமர்ப்பித்தனர். இதனால் மதனை உயிருடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். மேலும், மதன் தொடர்பாக பல வதந்திகளும் உலா வருகின்றன. மதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். மேலும் மதன் எழுதிய கடிதத்தில் ஐ.ஜே.கே. கட்சியின் முக்கிய நிர்வாகி ரங்கபாஷ்யம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவரிடம் போலீஸார் இதுவரை விசாரிக்கவில்லை. அவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள். அவரிடம் விசாரித்தாலும் சில தகவல்கள் போலீசுக்கு கிடைக்கும்" என்றார்.

இது தொடர்பாக மதன் குடும்பத்தினரிடம் கேட்டபோது, "மதன், நேபாளம் அல்லது வேறு எங்காவது உயிருடன் இருந்தாலே எங்களுக்கு நிம்மதிதான். அவரை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினால் போதும்" என்றனர்.

இதனிடையே வேந்தர் மூவிஸ் மதன், கடந்த மே மாதம் 3 கடிதங்கள் எழுதியிருந்ததாக சொல்லப்படுகிறது. அவற்றை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் மூலம் அவரின் தொடர்பில் முன்பு இருந்த முக்கிய கல்லூரி, சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களின் செல்போன் எண்களுக்கு அனுப்பியுள்ளார். அந்தக் கடிதங்களில் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர் குறித்து எழுதப்பட்ட கடிதம் மட்டுமே செய்திகளாக வெளிவந்து இருந்தன. இது தொடர்பாக அப்போதே பாரிவேந்தர் அறிக்கைகள் மூலம், தனக்கும் வேந்தர் மூவிஸ்க்கும் தொடர்பில்லை என்றும் மதன்தான் எங்கள் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளார் என்றும் விளக்கம் கொடுத்து இருந்தார்.

இந்நிலையில் நேற்று (புதன் கிழமை) மதன், புதுச்சேரி கோடீஸ்வரர் ராஜகோபாலுக்கு எழுதிய கடிதம் வாட்ஸ் அப்பில் பரவியது. அதில், தான் பணம் வாங்கிய மாணவர்களுக்கு கல்லூரியில் 'சீட்' கொடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் புகார்கள் அடிப்படையில், கடந்த 24ம் தேதி, ராஜகோபால் கல்லூரி மற்றும் வீடுகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி, 52 கோடி ரூபாயைக் கைப்பற்றினர்.

மேலும் மதனிடம் போலீசார் தரப்பில் விசாரணை முழுமையாக நடத்தப்பட்டால், இன்னும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மதன் வாயை திறந்தால்தான் அனைத்து மர்மங்களுக்கும் விடை கிடைக்கும்போல!

- எஸ்.மகேஷ்
நேபாளத்தில் வேந்தர்மூவிஸ் மதன் சுற்றிவளைப்பு..?- பரபரப்பு தகவல்கள் Reviewed by NEWMANNAR on July 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.