சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக சதி நடவடிக்கைகள்! சூத்திரதாரிகள் யார்? -
வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்களாக நாங்கள் தெரிவாகியபோது மாகாணசபைக்குரிய அதிகாரங்களை வைத்துப் பெரிதாக எதையும் சாதிக்க இயலாமற் போனாலும் சிலவற்றையாவது செய்துமுடிப்போம் என்ற நம்பிக்கையுடன்தான் வந்தோம்.
ஆனால் மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையே இருக்கக்கூடிய சாதாரண முரண்பாடுகளைப் பூதாகரமாக்கி உள்ளே நுழைந்த தீயசக்திகள், மாகாணசபையின் ஒற்றுமையைச் சீர்குலைத்ததால் எதனையுமே முழுமையாகச் செய்யமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இன்று முதலமைச்சரே நீதிமன்றப்படி ஏறும் நிலை தோன்றியுள்ளது. இந்தக் குளறுபடிகளின் பின்னால் உள்ள சூத்திரதாரிகள் யார் என்பது மக்களுக்குத் தெரியும்.
இவர்களுக்கான தீர்ப்பை மக்களே நாளை எழுதுவார்கள் என்று முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
பொ.ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து வாழ்வாதார உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,
மாகாணசபையில் இன்று இடம்பெற்றுவருகின்ற குழப்பங்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் முதலமைச்சரைப் பலமீனமாக்க வேண்டும் என்ற நோக்கமே உள்ளது.
மாகாணசபையில் உள்ள அத்தனை உறுப்பினர்களுக்கும் முதலமைச்சருடன் தோளோடு தோள்நின்று மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
ஆனால், ஆளும்கட்சியில் உள்ளவர்களே வேண்டாப் பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்பது போல முதலமைச்சரின் சகல செயற்பாடுகளையும் உள்நோக்கத்தோடு விமர்சித்து வருகிறார்கள்.
இதனால் மக்களுக்கான செயற்பாடுகளை மாகாணசபையால் வினைத்திறனுடன் முன்னெடுக்கமுடியாமல் உள்ளது. மாகாணசபையின் ஆயுள் முடிவடைவதற்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன.
அதற்குள் அமைச்சரவையைப் புதிதாக மாற்றியமைக்க வேண்டும் என்று சிலர் ஒற்றைக்காலில் நிற்கிறார்கள். ஏற்கனவே மாகாணசபையின் இயக்கம் மந்தகதியில் இருக்கும்போது இந்தச்செயற்பாடு மாகாணசபையை மேலும் மேலும் பலவீனப்படுத்துகிறது.
தங்களது பெயரையும் புகழையும் காப்பாற்றுவதற்காக அரசியல்வாதி ஒருவர் நீதிமன்றப்படி ஏறும்போது இந்நடவடிக்கைகளால் பொதுமக்களின் நலன் எந்தளவுக்குப் பாதிக்கப்படும் என்பதை அவர் சிந்தித்துத்தே செயற்படவேண்டும்.
ஏனெனில், மக்கள் பணிகளையே முதன்மை நோக்கமாகக் கொண்டு பதவிக்கு வருபவர்கள் தான் பாதிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களிற்கூட மக்களின் நலனுக்கே முன்னுரிமைகொடுப்பவராக இருக்கவேண்டும். அவரே உண்மையான மக்கள் நலப்பணியாளர் என்றும் தெரிவித்துள்ளார்.
சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக சதி நடவடிக்கைகள்! சூத்திரதாரிகள் யார்? -
Reviewed by Author
on
July 20, 2018
Rating:

No comments:
Post a Comment