விடுதலைப் புலிகளின் தலைவர் தலைமையில் அதிகரித்த சக்தி! அபாயம் குறித்து எச்சரிக்கும் சிறீதரன் -
தமிழர்களின் பேரம் பேசும் சக்தி பல துண்டுகளாக உடைந்தால் தமிழர்களின் இலட்சியப் பயணம் சிதைவடையும் அபாயம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எச்சரித்துள்ளார்.
கோணாவில் வட்டாரத்தின் யூனியன்குள பிரதேச மக்களுடனான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், நாங்கள் இந்த மண்ணிலே பல ஆண்டுகளாக உரிமை கோரி போராடி கொண்டிருக்கிறோம்.
ஆனால் இன்று வரை எமது இனத்தின் விடுதலை போராட்டமும், விடுதலை தாகமும் இன்று வரை உத்வேகத்தில் பயணிப்பதற்கு தமிழர்களின் பேரம் பேசுகிற சக்தி ஒரு தரப்பினரிடம் இருந்து வந்துள்ளதே காரணம்.
ஆரம்பத்தில் தந்தை செல்வா தலைமையில் இயங்கிய கட்சியின் கீழ் அணிதிரண்டிருந்த தமிழர்களின் பலம் அதன் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமையில் தமிழர்களின் பேரம் பேசும் சக்தி பல மடங்கு பலத்துடன் அதிகரித்தது.
அவர்களின் போராட்டம் மௌனித்ததன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அந்த பேரம் பேசும் சக்தி இருக்கிறது.
அந்த பேரம் பேசும் சக்தியை பல துண்டுகளாக உடைத்து தமிழர்களின் ஒற்றுமையையும், விடுதலை உணர்வுகளையும் மழுங்கடித்து எமது இளைஞர்களை தங்கள் இனம் பற்றி சிந்திக்க விடாமல் வேறு விதமான சிந்தனைகளுடன் பயணிக்க வைக்க இந்த மண்ணிலே சிலரால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த சந்திப்பில் யூனியன் குள பிரதேச மக்களின் குறைகளை கேட்டறிந்ததோடு, பிரதேச விளையாட்டு மைதானத்தினையும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பார்வையிட்டுள்ளார்.
இதில், கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் வேழமாலிகிதன், பிரதேசசபையின் உறுப்பினர் கிராம சேவையாளர் கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளின் தலைவர் தலைமையில் அதிகரித்த சக்தி! அபாயம் குறித்து எச்சரிக்கும் சிறீதரன் -
Reviewed by Author
on
September 10, 2019
Rating:

No comments:
Post a Comment