'சரித்திரம் படைக்க வந்த இயேசுவுக்கு சமாதி கட்டி விட்டோம்' என்று சந்தோஷித்தவர்களின் சந்தோஷம் நீடிக்கவில்லை. -மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார்.
'மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை. மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது. இதை மனம்தான் உணர மறுக்கிறது' எனக் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். மண் மனிதர்களை வெற்றி கொள்கிறது என்பது மனிதர்களைப் பொறுத்தவரை உண்மையாக இருக்கலாம். ஆனால் இயேசுவைப் பொறுத்தவரை அது உண்மையில்லை என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,,,
கல்லறையால் இயேசுவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆயிரக்கணக்கான யூதர்களைக் கொன்ற கிட்லருடைய கல்லறை மூடியே கிடக்கிறது. உலகை வென்று வெற்றிக்கொடி நாட்டிய மகா அலெக்சாண்டருடைய கல்லறையை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. வெற்றிக்கு மேல் வெற்றியைக் குவித்த நெப்போலியனின் கல்லறை கேட்பாரற்றுக் கிடக்கிறது. ஆனால் இயேசுவின் கல்லறை. அது வரலாற்றுக் கல்லறை!
ஜெருசலேமில் இயேசு அடக்கம் செய்யப்பட்ட கல்லறை நுழைவாயிலில் 'இவர் இங்கே இல்லை' என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. இயேசுவின் காலியான கல்லறை புதிய நம்பிக்கையின் அடையாளமாகும். இருள் ஒருபோதும் ஒளியை வெற்றிகொள்ள முடியாது. தீமை ஒருபோதும் நன்மையை வெற்றி கொள்ள முடியாது.
இயேசுவைச் சாவு தன் மடியில் வைத்திருக்க முடியவில்லை. சூரியனை திரைகொண்டு மூட முடியுமா? இயேசு வெற்றி வீரராய் பெரும் சுடராய் உயிர்த்தெழுந்தார். ஆம், கல்லறை திறந்ததுளூ காரிருள் மறைந்தது. கர்த்தர் இயேசு கன்ம வீரராய் உயிர்த்தெழுந்தார். சாவு வீழ்ந்தது வாழ்வு வந்தது. மனுக்குலம் மகிழ்ச்சிப் பிரவாகத்தில் துள்ளிக் குதித்தது!
'இயேசுவைக் கொன்று விட்டோம்,அவனை மண் தின்று விட்டது' என்று கொக்கரித்தவர்களின் கனவு நனவாகவில்லை. 'சரித்திரம் படைக்க வந்த இயேசுவுக்கு சமாதி கட்டி விட்டோம்' என்று சந்தோஷித்தவர்களின் சந்தோஷம் நீடிக்கவில்லை. சரித்திர நாயகன் இயேசு விசித்திரமாய் உயிர் பெற்றெழுந்தார். சத்தியத்திற்கு சான்று பகர வந்த இயேசு நித்தியத்திற்கும் வாழுகின்றவராய் உயிர் பெற்று எழுந்தார்.
அருட்தந்தை அய்வன் பெட்டன்கூட் என்பவர் மத்திய அமெரிக்காவில் வாழ்ந்;த ஒரு குருவானவர். இவர் 1976இல் கொலை செய்யப்பட்டார். அவர் அங்கம் அங்கமாக அறுக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். 'நீ ஏழைகளுக்காக போராடுவதை நிறுத்து' எனக் கோரப்பட்டார். உடலின் இறுதி அங்கம் அறுக்கப்பட்டு சாகும்வரை, 'நான் கோதுமையாக சிதைகிறேன். மீண்டும் முளைப்பேன்' என்று கூறி இறந்தார். ஆயர் ஒஸ்கார் றொமேரோ, 'நான் இறந்தாலும் இந்நாட்டு மக்களில் மீண்டும் உயிர்ப்பேன்' என்ற உறுதியோடு இறந்தார்.
சாதாரணமானவர்களுக்கு வாழ்வு சாவில் முடியலாம். ஆனால் மாவீரர்களுக்கு இலட்சியவாதிகளுக்கு சாவிலும் வாழ்வு தொடர்கிறது. இலட்சியவாதிகளை அழிக்கலாம். ஆனால் அவர்களின் இலட்சியங்களை அழிக்கமுடியாது.
கூட்டை உடைத்துக்கொண்டு குஞ்சுகள் வெளிவருவதுபோல பாறையை உடைத்துக்கொண்டு இயேசு உயிர்த்தார். இயேசுவின் உயிர்ப்பு அவருடைய மானிப்பிறப்பிற்குக் கிடைத்த வெற்றி. உண்மைக்குக் கிடைத்த வெற்றி. நீதிக்குக் கிடைத்த வெற்றி. ஆம் இன்று உயிர்ப்பு விழா! கல்லறை பிளந்த விழா! பூமி அதிர்ந்த விழா! பாவம் தோற்ற விழா! மீட்பு மலர்ந்த விழா! இயேசுவின் உயிர்ப்பு சாவின் சக்திகளுக்கு முடிவு கட்டியது. சாத்தானின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. 'மரணமே உன் கூர் எங்கே? மரணமே உன் கொடுக்கு எங்கே? எனக் கேட்டவர், சாவுக்கு சாவு மணி அடித்தவராக உயிர்த்துவிட்டார்.
இயேசு கல்லறைக்குள் புதைக்கப்படவில்லை. மாறாக விதைக்கப்பட்டார். இயேசுவின் அடக்கம் என்பது புதிய வாழ்வின் தொடக்கம். இயேசுவின் மரணம் என்பது புதிய வாழ்வின் ஜெனனம். இயேசுவின் இவ்வுலக முடிவு என்பது மறுவுலக வாழ்வின் விடிவு.
கிறிஸ்தவத்தின் அத்திவாரமாக ஆணிவேராக இருப்பது இயேசுவின் உயிர்ப்பே. இயேசுவின் உயிர்ப்புத்தான் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை. இயேசுவின் உயிர்ப்புத்தான் கிறிஸ்தவ விசுவாசத்தின் மையம். 1 கொரி. 15: 14 இல் 'கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் பொருளற்றதாகிவிடும்' என்கிறார் புனித பவுல். 'கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் ஒழிய அப்படியே இருக்கும். மடிந்தால்தான் அது பலன் கொடுக்கும்' என்று கூறிய இயேசு, தான் கூறிய இலக்கணத்திற்கு தானே இலக்கியமானார்.
ஒரு ஊரில் பஞ்சம் ஏற்பட்டது. பிழைப்புத்தேடி சென்றது ஓர் குடும்பம். தந்தை தனது இரு குழந்தைகளையும் சுமந்து சென்றார். நீண்ட பயணத்தால் நோய்வாய்ப்பட்ட குழந்தை ஒன்று வழியிலேயே இறந்துவிட்டது. நல்ல இடத்தில் இறந்த குழந்தையை புதைத்துவிட்டுச் செல்லலாம் எனத் தொடர்ந்து சுமந்து சென்றார் தந்தை. இரவானதும் மீண்டும் சுமக்க இயலாமல் ஒரு குழந்தையை அடக்கம்செய்துவிட்டு, மற்றக் குழந்தையுடன் சென்றார்கள். காலையானதும் தோளில் உறங்கும் குழந்தையை எழுப்பினர். அப்பொழுதுதான் அவர்களுக்குத் தெரிந்தது உயிருள்ள குழந்தையை வழியில் அடக்கம்செய்துவிட்டு இறந்த குழந்தையை சுமந்து வந்தனர் என்று.
இப்பெற்றோர் இறந்த குழந்தையில் உயிருள்ளதைத் தேடினர்! உயிருள்ளது இங்கு இல்லை. 'உயிரோடு இருப்பவரை ஏன் கல்லறையில் தேடுகிறீர்கள்' என்று வானதூதர் பெண்களிடம் கேட்கின்றனர். கிறிஸ்தவம் உயிர்த்த கிறிஸ்துவின் கல்லறையைத் தாண்டி தொடர்ந்து வாழ்வது.
சிறையில் அடைக்கப்பட்ட சோக்ரீட்டிசிடம் அவரைத் தப்புவிக்க நண்பர்கள் கேட்டபோது, அவர், வாழ்வை அன்பு செய்யாதவர்கள் வாழாதவர்களே! அவர்களே சாவை சந்திக்க அச்சம் கொள்வர்' என்றார். யாருக்கு சாவை சந்திக்க அச்சம்? வாழ்வை உண்மையாக, நேர்மையாக, நிறைவாக வாழாதவர்களே சாவைச் சந்திக்க அச்சம் கொள்வர்.
இயேசுவின் பாடுகள் மரணத்தோடு அவருடைய வாழ்வு முற்றுப்பெறவில்;லை. அவர் உயிர்த்தார். நம்முடைய வாழ்வும் பாடுகள் நிறைந்த வாழ்வுதான்! போராட்டங்கள் நிறைந்த வாழ்வுதான்! வாழ்க்கை என்பது போராட்டம். 'ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே. ஓவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவென்றால் பகலொன்று வந்திடுமே!' தாய் பிரசவ வேதனையை ஏற்க மறுத்தால் குழந்தை நலமாகப் பிறக்க முடியது. நோயாளி மருத்தவரின் ஊசியை ஏற்க மறுத்தால் அவர் நலமடைய முடியாது. ஆம் இயேசுவின் உயிர்ப்பு நமக்கு நம்பிக்கையைத் தருகின்றது.
'இறந்தேன் ஆயினும் இதோ நான் என்றென்றும் உயிர் வாழ்கிறேன்' எனத் திருவெளிப்பாடு நூலில் இயேசு கூறுகின்றார். நமது இறைவன் இறந்தோரின் கடவுள் அல்ல. அவர் வாழ்வோரின் கடவுள். நமது துன்பங்களைக் கண்டு நாம் மனம் உடைந்துபோகத்தேவையில்லை. ஏனெனில் இயேசு நம்மோடு உயிர்வாழ்கிறார். நம்மோடு இருக்கின்றார், நம்மோடு நடக்கின்றார்.
இயேசுவின் உயிர்ப்பு என்பது வெறும் செய்தி அல்லளூ வெறும் கேள்விப்பட்ட தகவல் அல்ல. அது சீடர்கள் நேரில் கண்டு பெற்றுக்கொண்ட இறை அனுபவம். அது ஆதித்திருச்சபையின் அடிமனதில் ஆழமாகப் பதிந்துவிட்ட அனுபவம்! அவர்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றிவிட்ட அனுபவம்! இயேசு உயிர்த்தார் என்பது வெறும் விசுவாச சத்தியம் மட்டுமல்ல.
அது ஆதித்திருச்சபையின் வாழ்க்கை அனுபவமாக இருந்தது. இயேசுவின் உயிர்ப்புக்கு நாம் சாட்சி பகரவேண்டும். எப்படி? நமது வாழ்வினால் நாம் சாட்சிபகரவேண்டும்.
இயேசு பாடுகள் பட்டபோது பயந்து ஓடி ஒழித்துக்கொண்ட சீடர்கள், இயேசு உயிர்த்தபோது புதிய உணர்வு பெறுகிறார்கள். புத்துயிர் பெறுகிறார்கள். நம்பிக்கை இழந்து பயந்துபோய் முடங்கிக்கிடந்த சீடர்கள் புத்தெழுச்சி பெறுகிறார்கள். இயேசுவின் உயிர்ப்பு அவர்தம் சீடர்களுக்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்தது. ஆண்டவர் மட்டும் உயிர்க்கவில்லை. அவரோடு அவருடைய சீடர்களும் உயிர்த்து எழுந்தார்கள். கோளைத்தனத்திலிருந்து துணிவுக்கு உயிர்த்து எழுந்தார்கள். அவவிசுவாசத்தில் இருந்து விசுவாசத்திற்கு உயிர்த்து எழுந்தார்கள். அறியாமையில் இருந்து தெளிவுக்கு உயிர்த்து எழுந்தார்கள். ஆம், பொய்மையில் இருந்து மெய்மைக்கு உயிர்த்து எழுந்தார்கள். இருளில் இருந்து ஒளிக்கு உயிர்த்தெழுந்தார்கள். சாவில் இருந்து வாழ்வுக்கு உயிர்த்தெழுந்தார்கள்.
இயேசுவின் உயிர்ப்பினால் அவருடைய சீடர்களும் உறுதி பெற்றார்கள். அதனால்தான் இயேசுவினுடைய செய்தியை அறிவிக்க அவர்கள் நாடு நகரங்களைக் கடந்து போனார்கள். காடு கடல்களை கடந்து கனதூரப் பயணம் போனார்கள். சாதாரண கலிலேயர்கள் உலகப் பேரரசுகளின் அடித்தளத்தளங்களையே ஆட்டம்காணச்செய்யும் அளவுக்கு ஆற்றல் பெற்றது இயேசுவினுடைய உயிர்ப்பின் அனுபவத்தினால்தான்.
இயேசுவின் உயிர்ப்பினால் உயிர்ப்புப் பெற்ற சீடர்களைப்போல நாமும் உயிர்க்க வேண்டும். இயேசுவினுடைய உயிர்ப்பின் செய்தி நம்மையும் உணர்ச்சியுள்ள மனிதர்களாக துடித்தெழச் செய்ய வேண்டும். பழையன கழிந்து புதிய படைப்பாக மாறுவோம். தீயவற்றை விழச் செய்து புனிதத்தை உயர்த்துவோம். அநீதியை விழச்செய்து நீதியை நிலைநாட்டுவோம். இருளை விழச்செய்து ஒளியை ஏற்றுவோம். தீமையை தூக்கி எறிந்து நன்மையை நிலைநாட்டுவோம்.
நாமும் நமது பாவத்தில் இருந்து சாபத்தில் இருந்து உயிர்க்க வேண்டும். சுயநலப் பிடியில் இருந்து நாம் உயிர்க்க வேண்டும். நம்மிடமுள்ள துர்க்குணங்களில் இருந்து நாம் உயிர்க்க வேண்டும். நம்மிடமுள்ள பாவப் பழக்கத்தில் இருந்து நாம் உயிர்க்க வேண்டும். நம்மிடமுள்ள அறியாமையில் இருந்து நாம் உயிர்க்க வேண்டும். இல்லையேல் இயேசுவின் உயிர்ப்பு நம்மைப் பொறுத்தவரை அர்த்தமற்றதாகிவிடும்.

No comments:
Post a Comment