புத்தளம் - மன்னார் வீதியை மீண்டும் திறக்க வேண்டும் - காதர் மஸ்தான்
நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டிருக்கும் புத்தளம் மன்னார் வீதியை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடுவதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
புத்தளம் மன்னார் வீதி 2019ஆம் ஆண்டு மூடப்பட்டது. அந்த வீதியை ஊடறுத்துச் செல்லும் கல்ஓயா பாலம் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்த பாலத்தை திருத்துவதற்கு நாங்கள் பல தடவைகள் முயற்சித்தபோதும் ஒருசில அரசியல் காழ்ப்புணர்ச்சிகளால் அந்த முயற்சிகள் குழப்பப்பட்டன.
இந்த நிலையிலேயே ஒரு சிலர் புத்தளம் நீதிமன்றில் இது தொடர்பில் வழக்கு தொடுத்தார்கள். இந்த வீதி மூடப்பட்டிருந்தபோதும் அதனை பயன்படுத்த முடியுமான ஒரு நிலையே இருந்து வந்தது.
வீீதியை நவீனப்படுத்த முடியாது என்றே நீதிமன்ற தீர்ப்பு இருந்தது. அவ்வாறான நிலையில் கடந்த அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதியுடன் இது தொடர்பாக நாங்கள் கலந்துரையாடியபோது அந்த கூட்டத்துக்கு சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் அங்கு வந்திருந்தார்கள்.
அவர்களே வீதி அதிகார சபை மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு பிழையான கருத்துக்களை தெரிவித்துள்ளனர் என்ற சந்தேகம் எமக்கு இருக்கிறது.
ஜனாதிபதி, பிரதமர் மன்னாருக்கு வந்திருந்த சந்தர்ப்பத்திலும் இந்த பாதையை திறப்பது தொடர்பில் சாதகமான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
மக்களும் அதுதொடர்பில் மகிழ்ச்சியுடன் பாரிய எதிர்பார்ப்புடடன் இருந்தார்கள். தற்போது நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பாரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
இந்த வீதியால் யாழ்ப்பாணம், மன்னாருக்கு 100 கிலாே மீட்டர் குறைவாக பயணிக்க முடியும். இதனால் செலவுகளை குறைத்துக்கொள்ள முடியுமாவதுடன் நேரத்தையும் மீதப்படுத்திக்கொள்ள முடியும்.
எனவே, நீதிமன்ற தீர்ப்பு எமக்கு வேதனை அளிக்கிறது. அதனால் இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் வீதி அதிகார சபை மற்றும் ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடி, இந்த வீதியை பயன்டுத்த முடியுமான ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment