தேங்காய் எண்ணெய் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் ஆகியவற்றின் மீது நிலவும் விசேட வரியை நீக்குவதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்ட யோசனை காரணமாக, தேங்காய் எண்ணெயுடன் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணெய் வகைகளைக் கலந்து சந்தைக்குக் கொண்டுவரும் அபாயம் உள்ளதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் சுட்டிக்காட்டுகிறது.
நேற்று (30) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே, இதன் மூலம் உள்ளூர் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயமும் எழுந்துள்ளதாகத் தெரிவித்தார்.
எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அந்த நிலைமை காரணமாகப் பாம் எண்ணெய் மற்றும் ஏனைய எண்ணெய் வகைகள் சந்தையில் அதிகமாகப் புழக்கத்திற்கு வரும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
வைத்தியர்களின் கருத்துப்படி, அதிக சூட்டில் உணவைப் பொரிப்பதற்குத் தேங்காய் எண்ணெய் மட்டுமே உகந்தது எனவும், பாம் எண்ணெய் மற்றும் ஏனைய எண்ணெய் வகைகளைப் பயன்படுத்துவது சுகாதார அபாயங்களை அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தென்னை சார்ந்த உற்பத்தியை ஏற்றுமதி செய்பவர்கள், உள்ளூர் சந்தைக்குத் தேவையான தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கான தேங்காயை வெளிநாட்டு ஏற்றுமதிக்குப் பயன்படுத்துவதால், உள்நாட்டுச் சந்தையில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் எனவும், அதன் மூலம் நுகர்வோர் பாம் எண்ணெய் மற்றும் ஏனைய எண்ணெய் வகைகளை நுகர்வதற்குத் தள்ளப்படும் நிலை ஏற்படும் எனவும் ரஞ்சித் விதானகே மேலும் தெரிவித்தார்.
தேங்காய் எண்ணெய் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Reviewed by Vijithan
on
January 30, 2026
Rating:
Reviewed by Vijithan
on
January 30, 2026
Rating:


No comments:
Post a Comment