பசிலுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு
உரிமையாளர் எவருமற்ற சொத்து என கூறப்படும் மல்வானையில் அமைந்துள்ள காணி மற்றும் வீட்டை, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (14) குறித்த வீட்டை சுற்றிவளைத்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது வழங்கிய மக்களிடமிருந்து திருடப்பட்ட சொத்துக்களை மீண்டும் மக்களிடமே ஒப்படைப்போம் என்ற வாக்குறுதியை நினைவூட்டி மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடவசதி குறைவாக உள்ள பல்கலைக்கழகங்களின் பயன்பாட்டிற்கும், பொதுமக்களின் தேவைக்கும் இந்தச் சொத்தைப் பயன்படுத்துமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த வீட்டிற்குத் தமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தமது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, இந்தச் சொத்து நீதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.
பின்னர், குறித்த காணியையும் வீட்டையும் ஏலத்தில் விற்பனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த 'அரகலய' போராட்டக் காலத்தில் ஒரு குழுவினரால் இந்த வீடு தீ வைக்கப்பட்டதுடன், இதனால் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்திருந்தது.
ஆரம்பத்தில் இங்கு சர்வதேச நீதிபதிகள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நீண்ட காலமாக அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்தச் சூழலிலேயே, உரிமையாளர் இல்லாத இந்தச் சொத்தை மாணவர்களின் கல்வி மற்றும் பொது நலச் சேவைகளுக்காக வழங்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது
பசிலுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு
Reviewed by Vijithan
on
May 14, 2026
Rating:
Reviewed by Vijithan
on
May 14, 2026
Rating:


No comments:
Post a Comment