தமிழர் பகுதியில் கோர விபத்து ; வீதியைக் கடந்த ஓய்வுபெற்ற அதிபர் பரிதாபமாக பலி
கிளிநொச்சி, ஏ - 9 பிரதான வீதியில் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில், ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
விபத்துக்குள்ளான அதிபர் வழமை போன்று தனது மாலை நேர நடைப் பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக அமைந்துள்ள மஞ்சள் கோட்டு பாதசாரி கடவையில் அவர் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மிகக் கொடூரமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அங்கு அவருக்கு வழங்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்துள்ளார்.
ஓய்வுபெற்ற அதிபர் பெருமாள் கணேசனின் திடீர் மறைவு, கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளில் அதிபராகவும், ஆசிரியராகவும் பணியாற்றி ஆயிரக்கணக்கான மாணவர்களைச் சிறந்த நிலைக்கு உயர்த்திய பெருமைக்குரியவர் பெருமாள் கணேசன் ஆவார்.
ஓய்வுபெற்ற பின்னரும் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டுப் பணிகளில் அவர் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
June 23, 2026
Rating:


No comments:
Post a Comment