அண்மைய செய்திகள்

recent
-

'ஒவ்வொரு வார்த்தையும் தங்கத்துக்கு நிகரானது!'- கோலியை அசத்திய ஆளுமை


மேற்கிந்தியத் தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்களை, கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் சந்தித்து, அறிவுரை வழங்கினார். ''விவியனின் ஒவ்வொரு  வார்த்தையும் தங்கத்துக்கு நிகரானது '' என இந்த சந்திப்பு குறித்து விராட் கோலி, ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணி, மேற்கிந்தியத் தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி, ஆன்டிகுவாவில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியை டென் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது.

இந்த நிலையில் இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு, மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ் நேற்று சென்றார். அங்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை சந்தித்தார். அப்போது கிரிக்கெட் பற்றிய சில டிப்ஸ்களையும் அவர்களுக்கு வழங்கினார். அவரது கருத்துக்களை விராட் கோலி, அஜிங்கிய ரஹானே, ஷிகர் தவான், முரளி விஜய், கே.எல். ராகுல் ஆகியோர் கவனமாக கேட்டுக் கொண்டனர்.  பின்னர் இந்திய வீரர்களுடன் ரிச்சர்ட்ஸ் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார்.

விவியன் ரிச்சர்ட்சுடனான சந்திப்புக்குப் பின், '' மறக்க முடியாத தருணம் இது. விவியன் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும் தங்கத்துக்கு  நிகரானது '' என ட்விட்டரில் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

''கிரிக்கெட் ஜாம்பவானுடன் கிரிக்கெட் குறித்த விவாதம்  மறக்க முடியாத நிகழ்வு'' என ஷிகர் தவான் குறிப்பிட்டுள்ளார். ''அற்புதமான மனிதர், விவியனுடன்  கிரிக்கெட் குறித்து விவாதித்ததை என்றும் மறக்க முடியாது'' என துணை கேப்டன் அஜிங்கிய ரஹானே கூறியுள்ளார்.

ஆனால் விவியன் ரிச்சர்ட்ஸ் வழங்கிய டிப்ஸ்கள்  குறித்து  இந்திய வீரர்கள் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. 'பொன்னான ஆலோசனைகளைப் பெற்றேன் ' என்பதோடு விராட் கோலி முடித்துக் கொண்டார். மற்ற வீரர்களும் கூட விவியன் என்ன பேசினார் என்பது குறித்து தகவல்கள் எதையும்   வெளியிடவில்லை.



இதற்கிடையே இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே, ஆன்டிகுவாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், " மேற்கிந்தியத் தீவுகளில்  பிட்ச்சுகள் மெதுவானதாக இருக்கும். இது போன்ற களத்தில், பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிப்பது கடினம். அதனால் பேட்ஸ்மேன்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். முதலிம் நம்மை நிலைநிறுத்திக் கொண்டு பின்னர், அடித்து விளையாடலாம். பந்து வீச்சாளர்கள் துல்லியமான முறையில் வீசும்போது அதனை நாம் பொறுமையுடன் எதிர்கொண்டால்தான் களத்தில் நீடித்து ஆட முடியும்.

பயிற்சி ஆட்டத்தில் நமது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினார்கள். பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் நிறைய விஷயங்களை கற்றுள்ளோம். நிலைத்து நின்று விளையாடி, நமது பந்து வீச்சாளர்களுக்கு நேரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மெதுவான பிட்சுகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது எளிதான விஷயம் இல்லை.


பிற மைதானங்களில் 150 பந்துகளில் சதத்தை எட்டிவிடலாம். ஆனால், இது போன்ற மைதானங்களில் சதமடிக்க 250 பந்துகளை சந்திக்க வேண்டியது இருக்கும். குறைந்தது 200 பந்துகளையாவது நாம் எதிர்கொள்ள வேண்டியதும் இருக்கும். எதிரணியை  குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. மேற்கிந்திய தீவுகள் அணியில் நல்ல பந்துவீச்சாளர்கள் உள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்'' என்றார்.


'ஒவ்வொரு வார்த்தையும் தங்கத்துக்கு நிகரானது!'- கோலியை அசத்திய ஆளுமை Reviewed by Author on July 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.