அண்மைய செய்திகள்

recent
-

நீதிமன்ற கட்டளையை மீறி தொடர்ந்தும் மக்களுக்கு இடையூறு செய்யும் இராணுவத்தினர்...


கேப்பாப்புலவில் காணிமீட்பிற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் நீதிமன்றத்தின் கட்டளையை மீறியும் இராணுவத்தினரினதும், இராணுவ புலனாய்வாளர்களினதும் இடையூறுகள் தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி கடந்த முதலாம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் 30ஆவது நாளாகவும் தமது போராட்டத்தினை தொடர்ந்துள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி கேப்பாப்புலவு பகுதியில் நடைபெற்று வரும் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் இராணுவத்தினரும், முள்ளியவளைப்பொலிஸாரும் இணைந்து தடை உத்தரவைக் கோரி முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இம்மாதம் 16ஆம் திகதி குறித்த வழக்கு விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் நாட்டின் அரசியலமைப்பின் படி பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது அவர்களது உரிமை, பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் கட்டளை எதனையும் நீதிமன்றம் பிறப்பிக்காது என சுட்டிக்காட்டிய முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் எஸ்.எம்.சம்சுதீன் கேப்பாப்புலவு போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருந்தனர்.

அத்துடன் தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரியே கேப்பாப்புலவு மக்கள் குடியேற்றப்பட்டுள்ள மாதிரிக்கிராமத்தின் அருகிலேயே குறித்த போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும், படையினரும் இராணுவப் புலனாய்வாளர்களும் புகைப்படங்களை எடுத்தும் மக்களை அச்சுறுத்தும் வகையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என கேப்பாப்புலவு மக்கள் தமது தரப்பு சட்டத்தரணி வி.திருக்குமரன் மூலம் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்ற கட்டளைகளை மீறி செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மன்றில் ஆஜராகியிருந்த முள்ளியவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் கேப்பாப்புலவு இராணுவமுகாம் பொறுப்பதிகாரி ஆகியோர் எச்சரிக்கை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நீதிமன்ற கட்டளைகளை மீறியும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தினமும் வரும் பொது அமைப்புக்கள் அரசியல் பிரமுகர்களையும் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

இதனைவிட போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள இராணுவத்தினரின் உணவகம் அருகில் உள்ள பேருந்து தரிப்பிடம் ஆகியவற்றில் இரவு பகலாக சிவில் உடைகளில் உள்ள இராணுவத்தினரும் இராணுவப்புலனாய்வாளர்களும் கையடக்கத்தொலைபேசிகள் மூலம் புகைப்படங்களை எடுத்தும் ஒலிப்பதிவுகளையும் செய்து வருகின்றனர்.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிலரை இரகசியமாக அழைத்து அங்கு வருபவர்களின் விபரங்களை கேட்டறிய முனைகின்றனர்.

அமைதியான முறையில் தாங்கள் தமது நிலமீட்புப்போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் இவ்வாறு நீதிமன்ற கட்டளைகளை மீறியும் படையினர் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர் என கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.


நீதிமன்ற கட்டளையை மீறி தொடர்ந்தும் மக்களுக்கு இடையூறு செய்யும் இராணுவத்தினர்... Reviewed by Author on March 31, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.