அண்மைய செய்திகள்

recent
-

சிறிலங்கா ஒரு இனநாயக அரசு! பிரித்தானிய நாடாளுமன்றில் நிறுவிய நூல் அறிமுக நிகழ்வு....


தன்னை சனநாயக அரசாகக் காண்பிக்கும் சிறிலங்கா, சாராம்சத்தில் முழு அளவிலான பௌத்த சிங்கள இனநாயக அரசு என்பதை நிறுவும் நூல் வெளியீட்டு நிகழ்வு பிரித்தானிய நாடாளுமன்றில் இடம்பெற்றுள்ளது.

கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா எழுதிய Government and Politics in Sri Lanka: Biopolitics and Security (இலங்கையில் அரசாட்சியும், அரசியலும்: உயிரரசியலும், பாதுகாப்பும்) என்ற அரசறிவியல் நூலிற்கான அறிமுக நிகழ்வு நேற்று 19.07.2017 புதன்கிழமை பிரித்தானிய நாடாளுமன்றில் நடைபெற்றது.

இதன்பொழுது உரையாற்றிய நூலாசிரியர், சிறிலங்கா ஒரு இனநாயக அரசு என்பதற்கான மிகச்சிறந்த ஆதாரமாக அதன் பெயர் திகழ்வதாகக் குறிப்பிட்டார்:

‘சிலோன் (Ceylon) என்று ஐரோப்பியர்களால் அழைக்கப்பட்ட இத்தீவு, பண்டைக் காலத்தில் தமிழர்களால் ஈழம் என்றும், இடைக்காலத்தில் இலங்கை என்றும் அழைக்கப்பட்டது.

ஆனால் லங்கா என்பது சிங்களவர்களால் மட்டும் பண்டைக் காலத்திலும், இடைக்காலத்திலும் இத்தீவை அழைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பெயராகும்.

இச் சிங்களப் பெயருக்கு முன்பாகப் புனிதமானது என்று தமிழில் பொருள்படும் ‘சிறி’ என்ற வடமொழிச் சொல்லை இணைத்ததன் மூலம் இத்தீவை சிங்களவர்களின் புனித பூமியாக அதன் பௌத்த சிங்கள ஆட்சியாளர்கள் வரையறுத்துள்ளனர்.


இது சிங்கள பௌத்த தேசியவாதத்தின் சித்தாந்த நூலாக விளங்கும் மகாவம்சத்தில் இருந்து தோற்றம் பெற்ற கருத்தியலாகும். இத்தீவு பௌத்த மதம் தழைத்தோங்குவதற்காகப் புத்தபிரானால் சிங்களவர்களிடம் கையளிக்கப்பட்டதாக மகாவம்சம் கூறுகின்றது.

எனவே இத்தீவிற்கு சிறிலங்கா என்று 1972ம் ஆண்டு பெயர் சூட்டியதன் மூலம் இதனை சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தமான தீவாக அதன் ஆட்சியாளர்கள் வரையறுத்திருக்கின்றார்கள்.’

பிரித்தானிய நாடாளுமன்றின் செயற்குழுக் கூட்டங்கள் நடைபெறும் மண்டபத்தில் மாலை 6:00 மணிக்கு ஆரம்பமாகிய நூல் வெளியீட்டு நிகழ்வில் தலைமை உரையினை தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் தலைவர் சென் கந்தையா அவர்கள் நிகழ்த்தினார்.


முதன்மை உரைகளைப் பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியின் நிழல் நிதித்துறை அமைச்சர் ஜோன் மக்டொனல் (John McDonnell), லிபரல் டெமொகிரட் (Liberal Democrat) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அவர்களின் கூட்டணி அரசாங்கத்தில் வணிகத்துறை அமைச்சராகப் பதவி வகித்த சேர் எட் டேவி (Sir Ed Davey), தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வெஸ் ஸ்றீற்றிங் (Wes Streeting), சிபோன் மக்டொனா (Siobhain McDonagh), ஸ்ற்ரிபன் ரிம்ஸ் (Stephen Timms), ஈராக்கின் குர்து மாநில அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான அரசியல் விவகாரப் பணிப்பாளர் கெசாரோ அஜ்காயி (Khasro Ajgayi) ஆகியோர் ஆற்றினர்.

நூல் அறிமுக உரையினை நூலின் ஆசிரியரான அரசறிவியலாளர் கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா ஆற்றினார்.

கருத்துரைகளை, பர்மிய மனித உரிமைச் செயற்பாட்டாளரும், LSE பல்கலைக்கழகத்தின் முன்னாள் அரசறிவியல் ஆராய்ச்சியாளருமான கலாநிதி மயூங்க் சார்னி (Myung Zarni), ஈழத்தமிழ் அரசியல் செயற்பாட்டாளரும், சிற்றி பல்கலைக் கழகத்தின் (City University) அரசறிவியல் பீட விரிவுரையாளருமான கலாநிதி மதுரிகா இராசரத்தினம் ஆகியோர் ஆற்றினார்.

இதனைத் தொடர்ந்து SOAS University of London பல்கலைக்கழக இணை விரிவுரையாளரும், கலாநிதி பட்ட வேட்பாளருமான செல்வி வினோ கணபதிப்பிள்ளை அவர்களின் தலைமையில் பார்வையாளர்கள் பங்கேற்ற கேள்வி-பதில் நேர நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் நூலாசிரியர் தனது நூல் அறிமுக உரையில் மேலும் குறிப்பிடுகையில்:

‘சிறீலங்கா ஒரு இனநாயக அரசு என்பதற்கான இன்னுமொரு ஆதாரமாக அதன் பெயர் மட்டுமன்றி, அதன் தேசியக் கொடியையும் கொள்ளலாம். அதில் உள்ள சிங்கம் சிங்கள இனத்தைக் குறிக்கின்றது.

சிங்கத்தின் நான்கு மூலைகளிலும் பௌத்த மதத்தின் குறியீடான அரச மர இலைகள் உள்ளன. அத்தோடு சிங்கம் தனது கையில் வைத்திருக்கும் வாள் இறைமையைக் குறிக்கின்றது.

அதாவது இறைமையின் குறியீடான வாளை சிங்கள இனத்தின் குறியீடான சிங்கம் தனது கையில் ஏந்தியிருப்பதானது இத்தீவில் இறைமையுள்ள ஒரேயொரு இனம் சிங்கள பௌத்த இனம் மட்டுமே என்பதைக் குறியீடு செய்கின்றது.

தவிர, பௌத்த மதத்திற்கும், சிங்கள மொழிக்கும் சிறீலங்காவின் அரசியலமைப்பு வழங்கியிருக்கும் அதியுச்ச சிறப்புரிமை, இவ் இனநாயக சித்தாந்தத்திற்கு சட்டபூர்வ, மற்றும் யாப்புரீதியான அங்கீகாரத்தை அளிக்கின்றது.


மேலும் பௌத்தர்கள் அல்லாதவர்களைக் கொல்வது பாவமில்லை என்று மகாவம்சம் கூறுகின்றது. பௌத்தர்கள் அல்லாதவர்கள் எல்லாம் மிருகங்களுக்கு ஒப்பானவர்கள்: அவர்களைக் கொல்வதால் சொர்க்கத்திற்கு செல்லும் பௌத்தர்களின் பாதையில் எந்த இடையூறுகளும் ஏற்படாது என்கின்றது மகாவசம்.

எனவே ஒன்றில் கடந்த காலங்களில் புத்தளம், நீர்கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நிகழ்ந்தது போன்று சிங்கள பௌத்தர்களாகத் தமிழர்கள் இனமாற்றத்திற்கு ஆளாக்கப்பட வேண்டும், அல்லது கொன்றொழிக்கப்பட வேண்டும் என்பதே சிங்கள பௌத்த தேசியவாதத்தின் நிலைப்பாடாகும்.

இந்த சித்தாந்தம் தான் தமிழர்கள் மீது போர்க்குற்றங்களையும், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்களையும், இனவழிப்பையும் சிறீலங்கா அரசு புரிவதற்கு அடிப்படையாக இருந்தது.

இதுதான் சிறீலங்கா அரசு புரியும் உயிரரசியல்.

இவ் உயிரரசியலானது ஆயுத மோதல்கள் மூலம் ஏற்படும் ஆட்கொலை, அடிபணிவு, குடிபெயர்ப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்துகின்றது.


இதனால் இவ் உயிரரசியல் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒரு யுத்தமாகவே கருதப்பட வேண்டும்.


1948ஆம் ஆண்டு தொடங்கிய இவ் யுத்தம் இன்று வரை தொடர்கின்றது. 1972ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரச படைகளுக்கும் இடையில் ஆயுத மோதல் வெடிப்பதற்கு முன்னர், சட்டம், பொருண்மியம், அரசியல் போன்ற வழிகளில் இவ் யுத்தம் முன்னெடுக்கப்பட்டது.

ஆயுத மோதல்கள் நிகழ்ந்த காலப்பகுதியில் படை நடவடிக்கைகள் மூலமும், ஏனைய வழிகளிலும் இவ் யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் மீண்டும் சட்டம், பொருண்மியம், அரசியல், இராசதந்திரம் போன்ற வழிகளில் இவ் யுத்தம் தொடரப்படுகின்றது.

சிறீலங்கா அரசு ஒரு இனநாயக அரசு மட்டுமன்றி, அது தமிழர்களுக்கு இழைக்கும் கொடூரங்கள் அனைத்தும் இனவழிப்பு நோக்கத்தைக் கொண்டவை என்பதை உயிரரசியல் என்ற கோட்பாடின் ஊடாக எனது நூல் நிறுவுகின்றது’ என்றார் நூலாசிரியர்.

நூலாசிரியரின் கருத்தை ஆமோதித்து கலாநிதி மதுரிகா இராசரத்தினம் அவர்கள் உரையாற்றுகையில், ‘மனித உரிமைகள் பற்றிய அறியாமை காரணமாகவே தமிழர்கள் மீதான கொடூரங்களை சிறீலங்கா அரசு புரிகின்றது என்ற வாதம் மேற்குலகில் சில தரப்புக்களால் முன்வைக்கப்படுகின்றது.


சிறீலங்காவின் ஆட்சியாளர்களுக்கும், ஆயுதப் படைகளுக்கும் மனித உரிமைகள் பற்றிய அறிவூட்டலை வழங்குவதன் மூலம் இதனை சீர்செய்யலாம் என்று அவர்கள் கருதுகின்றார்கள்.

இது தவறானது. தனது இனநாயக அரசமைப்பைத் தக்க வைக்கும் நோக்கத்துடனேயே சிறீலங்கா அரசு தமிழர்களைக் கொன்று குவித்தும், தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியும் வருகின்றது’ என்றார்.

இவ்விடத்தில் கலாநிதி மயூங்க் சார்னி (Myung Zarni) அவர்கள் உரையாற்றுகையில், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஏனைய இனங்கள் மீது இனவழிப்பைப் புரியும் சிறீலங்காவும், பர்மாவும் இனநாயக அரசுகள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்றும், காலனித்துவ ஆட்சிக் காலத்தில் நடைமுறையில் இருந்த இனவாதச் சித்தாந்தத்தை இவை தொடர்கின்றன என்றும் குற்றம் சுமத்தினார்.


சிறிலங்கா ஒரு இனநாயக அரசு! பிரித்தானிய நாடாளுமன்றில் நிறுவிய நூல் அறிமுக நிகழ்வு.... Reviewed by Author on July 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.