அண்மைய செய்திகள்

recent
-

உலக அளவில் பதக்கங்கள் பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்: முதல்வர் பேச்சு


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தென் மண்டல துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் பரிசுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:-

துப்பாக்கி சுடும் கலையை மேலும் நவீனப்படுத்துவதற்காக அம்மா தமிழ்நாடு காவல்துறைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்கள்.

தமிழ்நாடு காவல் துறை நவீனப்படுத்தப்பட்டதை அறிந்து, மற்ற மாநிலங்களும் தங்கள் மாநில காவல் துறையை நவீனப்படுத்தத் தொடங்கின. எனவே, மற்ற மாநிலங்களுக்கெல்லாம் அம்மாவின் தலைமையிலான, தமிழ்நாடு அரசு தான் வழி காட்டியாக இருந்திருக்கிறது என்று நாம் பெருமை அடையலாம்.

துப்பாக்கி சுடும் போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய், 3 லட்சம் ரூபாய் மற்றும் 2 லட்சம் ரூபாய் என ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அம்மா ஆசியுடன் புதுப்பிக்கப்பட்ட ஆவடி வீராபுரம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் 9வது தென் மண்டல துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்குவதில் மட்டில்லா மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன்.

இந்தப் போட்டிகளில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபர் தீவுகள் ஆகிய பகுதிகளிலிருந்து வீரர்கள் கலந்து கொண்டுள்ளது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கே வருகை தந்திருக்கும் 800 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஒரே இடத்தில் காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

ரூபா ஸ்ரீநாத், சர்வேஷ் சுவரூப் சங்கர், பிருதிவிராஜ் தொண்டைமான், நிவிதிதா, காயத்ரி, ஸ்ரீநிவிதிதா, வெங்கட்ராம், சந்தியா போன்ற வீரர்களும், வீராங்கனைகளும் ஆசிய அளவிலான போட்டிகளிலும், காமன்வெல்த் விளையாட்டுகளிலும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும், உலகக் கோப்பை போட்டிகளிலும் பங்கெடுத்துள்ளதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

ரூபா ஸ்ரீநாத் கோலாலம் பூரில் நடைபெற்ற 16வது காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றிருப்பதுடன், அர்ஜுனா விருது பெற்ற முதல் தமிழ்நாட்டு வீராங்கனை என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

இது தவிர, இந்த கிளப்பின் உறுப்பினர்கள் இந்திய தேசிய ரைபிள் அசோசியே‌ஷனில் தொழில்நுட்ப அலுவலர்களாகவும், பயிற்சியாளராகவும், மேலாளர்களாகவும் மற்றும் பன்னாட்டு போட்டிகளில் நடுவர்களாகவும் பணியாற்றியிருக்கின்றனர்.

துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுபவர்களுக்கு சலுகை விலையில் தளவாடப் பொருட்கள் வழங்கும் ஒரு சில கிளப்புகளில் இந்த கிளப்பும் ஒன்றாகும்.

மேலும், மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுக்கு நுழைவு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதோடு, சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியதாகும்.

1952ஆம் ஆண்டு குறைந்த உறுப்பினர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சென்னை ரைபிள் கிளப், இப்போது 475 உறுப்பினர்களைக் கொண்டு பாராட்டும் படியாக வளர்ச்சியடைந்துள்ளது.

இதில் சேருகின்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு காவல் துறையினரால் நுணுக்கமாக கண்காணிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

இந்த ரைபிள் கிளப் இப்போது 65ஆம் ஆண்டில் பயணம் செய்து கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. இந்தக் கிளப்பில் பயிற்சி பெற்றவர்கள் பலர் தேசிய அளவிலும், உலக அளவிலும் பல வெற்றி பதக்கங்களைப் பெற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளனர். அத்தகைய வீரர்களையும், வீராங்கனைகளையும் இந்த இனிய நேரத்தில் பாராட்டி வாழ்த்துகிறேன்.

உலக அளவில் பதக்கங்கள் பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்: முதல்வர் பேச்சு Reviewed by Author on August 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.