அண்மைய செய்திகள்

recent
-

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! ஒருபெரும் நிகழ்வாக நடத்தப்பட வேண்டும்!


ஈழத் தமிழ் இனத்தின் மிகப் பெரும் அழிவின், அவலத்தின் அடையாளமான மே 18 நெருங்குகிறது. அதையொட்டிய ஆரவாரங்கள் அதிகமாகி இருக்கின்றன.

வழக்கமாகவே இதுபோன்ற பரபரப்புகள் இந்தக் காலப் பகுதியில் ஏற்படுவது இயல்புதான்.என்றாலும் இந்தத் தடவை மே 18 நிகழ்வை அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து மேற்கொள்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவது போன்ற தோற்றப்பாடு இருக்கிறது.
எனினும் தான் தோன்றித்தனமான, தன்னிச்சையான, உரிய தரப்புகளுடனான கலந்துரையாடல் இல்லாத போக்கு ஒன்றும் அதில் தெரிகிறது.
அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைப்பதற்கான முயற்சி என்று கூறிக்கொண்டு பிரச்சினைகளை வளர்த்தெடுக்கும் வகையிலானதாக இந்த முயற்சிகள் அமைந்து விடக்கூடாது. அதற்கு வெளிப்படையான விரிவான கலந்துரையாடல் நடத்தப்படுவது அவசியம். 

கடந்த 3 வருடங்களாக முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு நடந்து வருகின்றது. முதன்மையான பெருமெடுப்பிலான நிகழ்வு வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் நடந்து வருகின்றது.
இந்த நிகழ்வு காலையில் இடம்பெறும். அதன் பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒரு நிகழ்வும், மாலையில் அங்குள்ள தேவாலயம் ஒன்றில் ஒரு நிகழ்வும் நடைபெறுவது வழமை.
எனினும் காலையில் நடக்கும் மாகாண சபையின் நிகழ்விலேயே பெரும் எண்ணிக்கையான மக்களும் கலந்து கொண்டு வந்தனர்.மாகாண சபையின் நிகழ்வில் அனேகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நகர, பிரதேச சபையினர் கலந்து கொண்டு வந்தனர்.
சீராக நடந்து வந்த இந்த நிகழ்வில் கடந்த ஆண்டு திட்டமிட்ட வகையில் சில குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உரையாற்ற முற்பட்டபோது ஒரு சிலர் அவர் பேசக்கூடாது என்று எதிர்ப்புக் குரல் எழுப்பி நிகழ்வைக் குழப்ப முயன்றனர். ஆனால் அது பின்னர் அடக்கப்பட்டு நிகழ்வு நடந்தேறியது. 

எனினும் அதன் பின்னர் முதலமைச்சருடன் இணைந்து ஒரு செய்தியாளர் சந்திப்பை அந்த இடத்தில் நடத்தலாம் என்றும் சம்பந்தர் அழைப்பு விடுத்த போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் அதனை நிராகரித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டிருந்தார்.
இத்தகையதொரு பின்னணியில் இந்த ஆண்டு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், அனைத்து அரசியல் தரப்பினரும் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கையை விடுத்தனர்.
அந்த முயற்சியின் மீது முதலில் எதிர்ப்புத் தெரிவித்த தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமாரும் அவரைச் சார்ந்தவர்களும், இப்போது இணங்கி வருவதற்குத் தயார் என்று தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஒருபெரும் நிகழ்வாக நடத்தப்பட வேண்டியது காலத் தேவையும் தமிழ் அரசியலின் தேவையும் கூட. அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து நினைவேந்தலை நடத்துவது வரவேற்கத்தக்கது தான் என்றாலும், அத்தகைய ஒரு முடிவு அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும் முக்கியமாக பாதிக்கப்பட்ட மக்களின் நேரடிப் பிரதிநிதிகளுக்கு சரி அரைவாசிப் பிரதிநிதித்துவம் கொடுத்ததாகவும், வெளிப்படையானதாகவும் அமைய வேண்டியது முக்கியம். ஆனால், தற்போதைய முயற்சிகள் அப்படி நடப்பதாகத் தெரியவில்லை.

அனைத்துத் தரப்புகளையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் ஒன்ற நடத்தப்படுவதற்கு முன்பாகவே, நிகழ்வுகள் யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் சார்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அரசியல் உரைகளை அனுமதிக்க முடியாது அல்லது 2 நிமிட நேரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இத்தகைய முடிவுகளை எவர் எடுத்தது? எப்போது எடுத்தது? எந்தக் கலந்துரையாடல்களின் அடிப்படையில் எடுத்தது?
அனைவரையும் ஒன்றிணையக் கேட்பவர்கள் , எப்படி இப்படியான தான்தோன்றித்தனமான முடிவுகளையும், தீர்மானங்களையும் அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடாமல் அறிவிக்க முடியும்? அதற்கான அதிகாரம் எவரால் இவர்களுக்கு வழங்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் தமிழ்த் தேசிய மீள் எழுச்சியின் மையமாக இருக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் தமது முதல் அழைப்பில் தெரிவித்திருந்தார்கள்.
முள்ளிவாய்க்காலில் அரசியல் பேசக் கூடாது என்பது அதற்கு முற்றிலும் முரணானதாக இருக்கின்றதே! வெறும் அஞ்சலி நிகழ்வை நடத்துவதாக இருந்தால் அதனை ஆலயங்களிலேயே நடத்திவிட்டுப் போகலாமே? எதற்காக முள்ளிவாய்க்காலுக்குச் செல்ல வேண்டும்?
இது போன்ற குழப்பகரமான அறிவிப்புகளையும், தன்னிச்சையான செயற்பாடுகளையும் உடனடியாக நிறுத்திவிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் நேரடியான பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய அனைத்துத்தரப்புக் கூட்டத்தை உடனடியாக மாகாண சபையின் ஏற்பாட்டில் நடத்தி இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கான ஒரு சுயாதீனமான குழுவை உருவாக்க வேண்டும்.

அதைவிடுத்து அரசியல்வாதிகளிடம் இருந்து நிகழ்வு நடத்தும் அதிகாரத்தை மற்றொரு தரப்புப் பிடுங்கிக் கொள்வதாக தற்போதைய முயற்சிகள் அமையக்கூடாது.
அத்தோடு இது ஒரு மதத்தினர் மட்டும் சம்பந்தப்படும் நிகழ்வும் அல்ல என்பதால் அனைத்து மதப் பிரதிநிதிகளும் அந்தக் கலந்துரையாடலில் உள்வாங்கப்படவும் வேண்டும்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! ஒருபெரும் நிகழ்வாக நடத்தப்பட வேண்டும்! Reviewed by Author on May 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.