அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தட்சனாமருதமடு ஸ்ரீமுருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு நிகழ்வு...படங்கள்


தமிழ் சைவ மக்களின் தனித்துவமான, பாரம்பரிய நிகழ்வுகளில் ஒன்றாக, ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப் பெறும் ஒரு திருநாளாகும். ஆடிப்பிறப்பு என்ற பண்டிகை தமிழ் சமூகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். குறிப்பாக ஈழத் தமிழர்கள் இந்தப் பண்டிகையை தமது கலாசார, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கொண்டாடி வந்துள்ளார்கள். அன்றைய நாளில் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும் சிறப்பு உணவுகள். இந்த உணவுகள்தான் ஆடிப்பிறப்பு பண்டிகை கொண்டாட்டத்தின் அடையாளங்களாகவும் ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு உணவுகளாகவும் இருக்கின்றது.

தைப்பொங்கல்
சித்திரை வருடப்பிறப்பு
ஆடிப்பிறப்பு என்பன மாத முதற்திகளில் வரும் முக்கியமான பண்டிகைகளாகும்.

2018 ஆண்டுக்கான ஆடிப்பிறப்பு திருநாள் நிகழ்வுகள் வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் மடு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டுடன்  17.07.2018 ம் திகதி சைவமும் தமிழும் தளைத்து ஓங்கும் தட்சனாமருதமடு கிரமத்தில் ஸ்ரீமுருகன் ஆலயத்தில் நடைபெற்றது .

கடந்த வருடம் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் மடு பிரதேச செயலகத்தில் நடைபெற்றதுடன் இம்முறை கிராமிய ரீதியாக நடைபெற்றமை குறிப்பிடதக்கது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மடு பிரதேச செயலாளர் திரு ஜெயகரன், மாகாண, மடு பிரதேச செயலகத்தைச்சேர்ந்த, கலாச்சார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், தட்சனாமருதமடு அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை, மடு பிரதேச செயலகத்தைச்சேர்ந்த உத்தியோகஸ்தர்கள் கிராம அலுவலர்கள் விசேடமாக கலந்துகொண்டனர். அத்துடன் கலைமகள் கலா மன்றத்தினரின் இசைத்திறமையும் பாரம்பரிய கோலாட்டமும் சிறப்பாக வெளிகொண்டுவரப்பட்டது மடு பிரதேச செயலாளர் உரையாற்றுகையில் யாழ்மாவட்டத்தில் இப்பண்டிகை காலகாலமாக கொண்டாடப்படும் அதேவேளை இப்பிரதேசங்களில் குறைந்துவருவதாகவும் தனது கரிசனையை வெளிப்படுத்தினார். மேலும் இந்நிகள்வுக்கு சகலவளிகளிலும் உதவிபுரிந்த தட்சனாமருதமடு மக்களுக்கும், மடு பிரதேச செயலகத்தைச்சேர்ந்த, கலாச்சார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் ஒழுங்குபடுத்தல்களை மேற்கொண்ட மடு சைவப் பேரவையின் தலைவர் திரு நாகேந்திரம் அண்ணன் மற்றும் நிகழ்வினை சிறப்பாக ஒழுங்குபடுத்திய மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் மண்ணின் மைந்தன் மகிந்தன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களை தெரிவித்துநிற்கின்றோம். எதிர்வரும் வருடங்களில் இந்நிகழ்வினை மடுப்பிரதேசத்திலுள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு அழைப்புவிடுக்கின்றோம்.. .
ஆடிக் கூழ் சமைப்போம் வாரீர்....

ஆடி விதை தேடி விதை
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
ஆடி ஆவணி ஆன புரட்டாதி
காடி தோய்த்த கனபனங் காயத்தைத்
தேடித் தேடித் தினமும் புசிப்பவர்
ஓடி யோடி யுலகெலாம் பீச்சுவர்

என்பன போன்ற பழம் பாடல்களால் ஆடி மாதம் ஆனந்தமாகக் கொண்டாடப்பட்டு வந்ததென்பது அறியக் கிடக்கின்றது. ஆடி தொடக்கம் தை வரையுள்ள காலம் பெரும்பாலும் மாரிகாலமாகக் காணப்படுகின்றது. அதனால் “ஆடிவிதை தேடி விதை” என்று கூறும் பழமொழியும் எம்மிடை வழங்கி வருகின்றது. ஆடிமாதத்தை விதைப்புத் தொடங்கும் காலமாகவும், தைமாதத்தை அறுவடை முடிந்த காலமாகவும் நாம் கணிக்கலாம். இதனால் தைப்பொங்கல் பெறும் அளவு முக்கியத்துவத்தை ஆடிப்பிறப்பும் பெறுகின்றது.

மேலும் ஆடி மாதம் தொடங்கும் தெய்வீகப் மாதமாகவும், அம்மனுக்கு உரிய மாதமாகவும் போற்றப்பெறுகின்றது. அத்துடன் ஆடி மாதத்தில் பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரிதரித்தார் என்றும், பார்வதி மேற்கொண்ட தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார் என்றும், புராணங்கள் கூறுகின்றன. அத்துடன்; ஆடி மாதத்தில் சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி அதிகமாக இருப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன.

மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும், உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும், எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்தமானவை. கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.

ஆடிப்பிறப்பின் சிறப்பினை கூற வந்த ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் முற்காலத்தில் ஆடிப்பிறப்பு எப்படிக் கொண்டாடப் பெற்றது என்பதனையும், ஆடிப்பிறப்பிற்கு முதல் நாள் சிறுவர்கள் கொள்ளும் உற்சாகத்தினையும், சந்தோசத்தையும் தம்மையும் ஒரு சிறுவனாக பாவனை செய்து பாடிய பாடல் பிரபல்யமானது.

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே

குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!















மன்னார் தட்சனாமருதமடு ஸ்ரீமுருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு நிகழ்வு...படங்கள் Reviewed by Author on July 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.