அண்மைய செய்திகள்

recent
-

இனி வரும் நாட்களில் இலங்கை தமிழர்களின் நிலை..! தமிழகத்தில் இருந்து வந்துள்ள எச்சரிக்கை -


2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையில் முக்கிய பங்கு வகித்த கோட்டாபய ராஜபக்ச தற்போது அதிபராக வந்துள்ள நிலையில் மீண்டும் தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும் என்ற அச்சம் பரவலாக உள்ளது. அந்த அச்சத்தை உறுதிப்படுத்தும் விதமாக இலங்கை அரசின் நடவடிக்கை அமைந்திருக்கிறது என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"2009 ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து உலக நாடுகளின் வலியுறுத்தல் காரணமாக ஒரு விசாரணைப் பொறியமைவை உருவாக்க 2015 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை அரசும் இருந்தது. 'அவ்வாறு தாங்கள் பங்கேற்று நிறைவேற்றிய தீர்மானத்திலிருந்து வெளியேறுகிறோம், அந்தத் தீர்மானத்தை நடைமுறைபடுத்த மாட்டோம்' என்று இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். இது மீண்டும் இலங்கையில் இனப்படுகொலை நடைபெறுவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஐநா மனித உரிமைக் கவுன்சில் அனுமதிக்கக் கூடாது. இலங்கை இனப்படுகொலைகள் குறித்து சுயேச்சையான விசாரணை அமைப்பு ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை குறித்து நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஐநா மனித உரிமைக் கவுன்சில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தை முன்மொழிந்த இலங்கை அரசு அதன் பின்னர் 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் கூடிய ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டங்களிலும் இந்த தீர்மானத்தை அன்றைய மைத்ரிபால அரசு வலியுறுத்தி வந்தது.

தற்போது புதிதாக பொறுப்பேற்றிருக்கும் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஐநா மனித உரிமை கவுன்சிலில் 'இலங்கை அரசு ஒப்புக்கொண்ட எதையும் நிறைவேற்றப் போவதில்லை, அந்த தீர்மானத்தில் இருந்து வெளியேறுகிறோம்' என்று அறிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையில் முக்கிய பங்கு வகித்த கோட்டாபய ராஜபக்ச தற்போது அதிபராக வந்துள்ள நிலையில் மீண்டும் தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும் என்ற அச்சம் பரவலாக உள்ளது. அந்த அச்சத்தை உறுதிப்படுத்தும் விதமாக இலங்கை அரசின் நடவடிக்கை அமைந்திருக்கிறது.
'உள்நாட்டு சட்டங்களைக் கொண்டு நாங்கள் நீதி வழங்க எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம்' என்று கோட்டாபய ராஜபக்ச கூறினாலும் அங்கு தமிழர்களுக்கு எவ்வித உரிமையும், நியாயமும் வழங்கப்படாது என்பதே வெளிப்படையான உண்மை .

இந்நிலையில், தற்போதுள்ள அரசாங்கத்தைக் கலைத்துவிட்டு புதிதாகத் தேர்தல் நடத்த கோட்டாபய அறிவிப்புச் செய்துள்ளார். இதன் மூலம் நாடாளுமன்றத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் தன் கையில் கொண்டு வருவதற்கு அவர் திட்டமிட்டு இருக்கிறார். அதன்பிறகு நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தியே தமிழர்களுடைய உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது.
எனவே, சர்வதேச சமூகம் இதை வேடிக்கை பார்க்கக் கூடாது. தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வரும் கூட்டத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ள ஐநாவின் மத சுதந்திரத்துக்கான பதிவாளர் இலங்கையில் இன அடிப்படையிலான பகைமை அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகள் வெறுமனே வருத்தம் தெரிவித்ததோடு நின்றுவிடாமல் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க முன்வர வேண்டும். இலங்கை அரசு அந்த தீர்மானத்தில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் சுயேச்சையான விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைத்து இலங்கை இனப்படுகொலை குறித்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாத நிலை உருவாகிவிடும். அதற்கு ஐநா மனித உரிமை கவுன்சில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இனி வரும் நாட்களில் இலங்கை தமிழர்களின் நிலை..! தமிழகத்தில் இருந்து வந்துள்ள எச்சரிக்கை - Reviewed by Author on March 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.