மலேசிய விமானம் : கறுப்புப்பெட்டியைத் தேடி விரைகிறது அமெரிக்கக் கடற்படை
காணாமற்போன மலேசிய விமானத்தின் கறுப்புப்பெட்டியைத் தேடுவதற்கான காலம் கடந்து செல்கின்றது.
உண்மையில் விமானத்திற்கு என்ன நடந்தது என்பதை கறுப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே உறுதிப்பட கூற முடியும் என்பதால், கறுப்புப்பெட்டியை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது என தெரிவிக்கப்படுகின்றது.
போயிங் 777 விமானம் காணாமற்போய் 17 நாட்கள் கடந்துள்ள நிலையில் இது வரை விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்படவில்லை.
குறித்த கறுப்புப்பெட்டியின் மின்கலம் செயலிழப்பதற்கு முன்னர் அதனைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
கறுப்புப்பெட்டியில் உள்ள மின்கலம் இயக்கத்தில் இருக்கும் 30 நாள் காலப்பகுதி வரை அதில் இருந்து சமிக்ஞை வெளியாகும் எனவும் அதனைப் பயன்படுத்தி விமானத்தைக் கண்டுபிடிக்க முடியும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், அதன் பின்னர் மேலும் 15 நாட்கள் கறுப்புப்பெட்டியில் உள்ள மின்கலம் இயக்கத்தில் இருக்கும் என துறைசார் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, தெற்கு இந்திய சமுத்திரத்தில் விழுந்ததாகக் கூறப்படும் மலேசிய விமானத்தின் கறுப்புப்பெட்டியைத் தேட, அமெரிக்க கடற்படையின் நவீன தொழில்நுட்பக்கருவி பயன்படுத்தப்படவுள்ளது.
அமெரிக்க கடற்படை நேற்று விடுத்த அறிக்கையில், கடலில் மூழ்கிய விமானத்தின் கறுப்புப்பெட்டியைக் கண்டுபிடிப்பதற்காகவே டிபிஎல்-25 சிஸ்டம் என்ற பிரத்யேகமான கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம்
கடலில் 20 ஆயிரம் அடி ஆழத்தில் கறுப்புப்பெட்டி விழுந்திருந்தாலும் கூட கண்டுபிடித்து விடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மாயமான விமானம் கடலில் விழுந்ததை மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் நேற்று உறுதி செய்துள்ளார்.
மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நேற்யை தினம் (24) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ” எம்எச்-370 விமானம் தெற்கு இந்திய சமுத்திரத்தில் விழுந்து நொறுங்கியுள்ளது என்பதை ஆழ்ந்த சோகத்துடன் உறுதி செய்கிறேன். பிரிட்டன் செயற்கைக்கோள் அனுப்பிய தகவலின் அடிப்படையில், இது உறுதி செய்யப்பட்டுள்ளது” என அறிவித்துள்ளார்.
மலேசிய விமானம் : கறுப்புப்பெட்டியைத் தேடி விரைகிறது அமெரிக்கக் கடற்படை
Reviewed by NEWMANNAR
on
March 25, 2014
Rating:

No comments:
Post a Comment