இரு தாய்மார் ஆறு குழந்தைகள் பிரசவிப்பு –மட்டு. போதனா வைத்தியசாலையில் சம்பவம்-படங்கள்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரு தாய்மார் ஆறு குழந்தைகளை பிரசவித்துள்ளதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் இரு தினங்களில் இவ்வாறான சம்பவம் நடைபெற்றுள்ளது முதல் தடவையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு நாவற்காடு பிரதேசத்தினை சேர்ந்த ராஜ்குமார் நிசாந்தினி எனும் தாய் ஒரே சூழில் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
அறுவைச்சிகிச்சை மூலமே குறித்த குழந்தைகள் பிரசவிக்கப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் மா.திருக்குமார் தெரிவித்தார்.
மூன்று குழந்தைகளும் தேகாரோக்கியத்துடன் உள்ளதாகவும் இப்பிரசவத்தின் மூலம் இரு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் பிரசவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்று ஏறாவூர் செம்மணோடையை சேர்ந்த திருமதி நியாம்டின் என்னும் பெண் மூன்று குழந்தைகளை ஒரே பிரசவத்தில் ஈன்றுள்ளார்.
தனது முதல் பிரசவத்திலேயே இந்த மூன்று குழந்தைகளையும் ஈன்றதாகவும் சத்திர சிகிச்சை மூலமே இவர் குழந்தையை ஈன்றதாகவும் மகப்பேற்று வைத்திய நிபுணர் காஞ்சன வன்சபுர தெரிவித்தார்.
மூன்று குழந்தைகளும் தேக ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆறு குழந்தைகளும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட சிசு சிகிச்சை பகுதியில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சிசுக்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் இராப்ராலெப்பை மற்றும் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் திருமதி கிரேஷ் நவரெட்னராஜா, குழந்தை நல வைத்திய நிபுணர் திருமதி விஜி திருக்குமார் உட்பட வைத்தியர்கள் பார்வையிட்டதுடன் அவற்றின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் முதல்முறையாக இரு தினங்களில் இரு தாய்மார் ஆறு குழந்தைகளை பிரசவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரு தாய்மார் ஆறு குழந்தைகள் பிரசவிப்பு –மட்டு. போதனா வைத்தியசாலையில் சம்பவம்-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
July 28, 2014
Rating:
No comments:
Post a Comment